

இரவு நேர ஊரடங்கை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கை மீறி இயக்கப்படும் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர்.
தமிழகத்தில் கரோனா தடுப்புநடவடிக்கையாக இரவு 10 மணிமுதல் காலை 4 மணி வரைஊரடங்கு அமல்படுத்தப்பட் டுள்ளது. வாகனங்கள் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் போலீஸார் சோதனைச் சாவடிகள், தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இரவு ஊரடங்கை மீறி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்கின்றனர். மாவட்ட எல்லைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட் டுள்ளன.
இரவு 10 மணிக்கு பிறகு அனைத்து வாகனங்களும் சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்படுகின்றன. அத்தியாசிய தேவை மற்றும் அரசு அனுமதித்துள்ள சேவைகளுக்கான முறையான ஆவணங்களுடன் வரும் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது. மற்ற வாகனங்களுக்கு போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர்.
இதனிடையே இரவு நேர ஊரடங்கின் முதல் நாளான நேற்று சரியான காரணங்களை கூறிய சில வாகனங்களை மட்டும் தொடர்ந்து செல்ல போலீஸார் அனுமதித்தனர். ஆனால், இன்று முதல் எந்த வாகனங்களையும் அனுமதிக்க மாட்டோம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து நிலையங்களில் தஞ்சம்
மாவட்ட தலைநகரங்களில் வெளியூர் செல்வதற்கு வந்த பயணிகள் பேருந்துகள் கிடைக்காததால் பேருந்து நிலையங்களிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், பேருந்து நிலைய கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் உணவு, தண்ணீர் கிடைக்காமல் பயணிகள் அவதிப் பட்டனர். காலை 4 மணி வரை காத்திருந்து பேருந்துகளில் ஏறிச் சென்றனர். பேருந்து நிலையங்களில் பெண்களும் அதிக அளவில் தங்கியதால் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.