கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை மனு: இலவசமாக வழங்குவதாக மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கக் கோரி, வேதாந்தா நிறுவனம் மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிஉள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்யஅனுமதி அளிக்கக் கோரி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோருக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் தினமும் 1,050 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையிலான 2 ஆலைகள் உள்ளன. இதில், 500 டன் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட ஒரு ஆலையை உடனடியாக இயக்க தயாராக உள்ளோம்.
தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு காரணமாக ஆலை மூடப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்துஇலவசமாக கொடுக்கும் வகையில், ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் ஆலையை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்திலும் வேதாந்தா நிறுவனம் சார்பில் தனியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
