

கோவையில் இரவு நேரங்களில் கட்டுப்பாடுகளை பின்பற்றி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷிப்ட முறையில் நேர மாற்றங்களை செய்ய தொழில் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடந்த 20-ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
தொழில் நகரமான கோவையில், இரவு நேர கட்டுப் பாட்டிலிருந்து அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என தொழில் துறையினர் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், சிறு, குறு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு தெரிவித்தார். அவர் கூறியதாவது:
தொழில் துறை தற்போதுள்ள சூழலில் இரவு நேரங்களில் உற்பத்தியை நிறுத்தினால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கி, பொது இன்ஜினியரிங் சார்ந்த சிறு, குறு நிறுவனங்களை மட்டும் இரவு நேரங்களில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தொழிலாளர்கள் உற்பத்தி நிறுவனங்களை விட்டு வெளியில் வராமலும், விதிகளை பின்பற்றியும் செயல்பட இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அனுமதி கேட்ட வகையின் கீழ் 20 ஆயிரம் வரையிலான சிறு, குறு நிறுவனங்கள் வருகின்றன. அனைத்திலும் அரசு கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப ‘ஷிப்ட்’ முறையில் தேவையான மாற்றங்களை செய்யவும், கட்டுப்பாடுகள், கரோனா விதிகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் பெரிய நிறுவனங்கள் அளித்த ஆர்டர்களை குறிப்பிட்ட தேதிக்குள் முடித்து அனுப்ப வேண்டிய கட்டாயம் அனைத்து நிறுவனங்களுக்கும் உள்ளது. இதனால் திட்டமிட்டபடி வேலை செய்ய வேண்டியது அவசியமானது. இவ்வாறு அவர் கூறினார்.
தென்னிந்திய பொறியியல் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் (சீமா) கார்த்திக் கூறுகையில், “கட்டுப்பாடுகளை பின்பற்றி இரவு நேரங்களில் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது” என்றார்.