

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் உள்ளவர்களுக்கு காஸ் சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2004-ம் ஆண்டில் ரூ.261.60 ஆக இருந்தது. தற்போதோ அது ரூ.419.26 ஆக 100 சதவீதம் அளவு உயர்ந்துள்ளது. இந்நிலையில், ரூ.10 லட்சம் ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு ஜனவரி 1 முதல் சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயு மட்டுமின்றி, அரசின் சார்பில் மக்களுக்கு எவ்வித மானியமும் அளிக்கக் கூடாது என்பதுதான் உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனத்தின் கட்டளையாகும். இந்த சூழலில்தான் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு மானியம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து படிப்படியாக அனைத்து தரப்பு மக்களுக்கும் முழு மானியமும் ரத்து செய்யப்படும் நிலை உருவாக்கப்படும். தாமாக முன்வந்து 57.5 லட்சம் பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர். இதனால் மத்திய அரசின் மானிய சுமை கணிசமாக குறைந்துவிட்டது. எனவே, சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்யும் அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.