

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால், சுற்றுலாவை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், 50 சதவீத சுற்றுலா பயணிகளை தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கும்போது, லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இவர்களை நம்பி ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
சென்ற ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக கோடை சீசனின்போது முழு முடக்கம் அறிவிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் வருகையின்றி வர்த்தகம் முடங்கியது. வியாபாரிகள் மற்றும்அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்தனர்.
கடந்தாண்டு இறுதியில் படிப்படியாக சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதால், விற்பனை மெல்லமெல்ல களைகட்டத் தொடங்கியது. நடப்பு ஆண்டில் கோடைவிழா விமர்சையாக நடைபெறும் என வியாபாரிகள் எதிர்பார்த்த நிலையில், கரோனா தொற்றின் 2-வது அலையால், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள், உணவகங்கள், விடுதி உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வர்க்கி, சாக்லேட், நீலகிரி தைலம் உற்பத்தியாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், பூங்காக்கள் மற்றும் புகைப்படத் தொழில் செய்து வருபவர்கள் என ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
உதகையில் தங்கும் விடுதி உரிமையாளர் ச.பசாலுதீன் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மட்டுமே வாழ்வாதாரமாகக்கொண்டு, ஒரு லட்சம் குடும்பங்கள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் காரண மாக கோடை சீசனின்போது,சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. கரோனா பரவலால் கடந்த ஆண்டும், தற்போதும் கோடை சீசனின்போது சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ஆண்டாக தொழில் இல்லாததால் தங்கும் விடுதிகளை பராமரிக்க முடியவில்லை. ஊழியர்களுக்கு ஊதியம்கூட வழங்க முடியவில்லை’’ என்றார்.
சாக்லேட் மற்றும் பொம்மை வியாபாரி அஜீஸ் கூறும்போது ‘‘கோடை சீசனையொட்டி லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்ற நம்பிக்கையில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்களை கொள்முதல் செய்துள்ளோம். பெரும்பாலும் சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே, நீலகிரி மாவட்டத்தில் 50 சதவீத சுற்றுலா பயணிகளை அனுமதித்து, எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்’’ என்றார்.
சுற்றுலா வாகன ஓட்டுநர் நலச்சங்க தலைவர் கோவர்தன் கூறும்போது, ‘‘சுற்றுலா பயணிகள் வர தடைவிதிக்கப்பட்டதால் வாகனக் கடன், குடும்ப பராமரிப்பு, நிதி நிறுவன நெருக்கடி போன்ற பலபிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளோம். சுற்றுலாவுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டும்’’ என்றார்.