Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM

பீட்ரூட் விலை சரிவு: விவசாயிகள் வேதனை

உடுமலை

உற்பத்தியும் குறைந்து, விலையும் குறைந்ததால் பீட்ரூட் சாகுபடி செய்யும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 800 ஏக்கர் பரப்பில் பீட்ரூட் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை நடந்துவருகிறது.

இதுகுறித்து, சோமவாரபட்டியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, “விதை நடவு செய்த நாளில் இருந்து 80 நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும். 200 கிராம் விதையின் விலை ரூ.1,100. ஏக்கருக்கு சுமார் இரண்டேகால் கிலோ விதை தேவைப்படும். சொட்டு நீர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. உர செலவாக மட்டுமே ஏக்கருக்கு 12,000 வரை செலவு செய்யவேண்டும். இது தவிர 3 முறை பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டும். நடவு, களை அகற்றுதல் என ஏக்கருக்கு ரூ.40,000 வரை செலவாகிறது.

தண்ணீர், முறையான பராமரிப்பு இருந்தால் ஏக்கருக்கு 15 டன் வரை விளைச்சல் கிடைக்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டியதால் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. அதேபோல மழைக்காலங்களில் அதிக அளவில் புழு தொல்லை இருக்கும். அவற்றை அழிப்பதற்காக கூடுதல் செலவு ஏற்படும்.

கடந்த ஆண்டு கிலோ ரூ.20-க்கு பீட்ரூட் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இது படிப்படியாக குறைந்து, தற்போது கிலோ ரூ.7-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரே நேரத்தில் அதிகமான விவசாயிகள் ஒரே பயிரை சாகுபடி செய்வது தான் விலை இறக்கத்துக்கு காரணமாகிவிடுகிறது. விவசாயிகளே விளை பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் நிலையை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, “அரசு சார்பில் தோட்டக்கலை பயிர்களுக்கு வழங்கும் அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு சென்று சேர நடவடிக்கை எடுத்து வருகிறோம். விளைபொருளுக்கு நியாயமான விலை நிர்ணயம் வேண்டும் என்பது பல ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x