

எலி மருந்து கலந்து வைத்த பன் ரொட்டிகளை தெரியாமல் சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை ராஜமங்கலம், தாதங்குப்பம், புதுத் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி லிடியா (38). இவர்கள் அதே பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தனர். இவர்கள் வசித்து வரும் வீட்டில் எலித் தொல்லை அதிக அளவில் இருந்துள்ளது. காய்கறிகள் மற்றும் வீட்டில் உள்ள மளிகை பொருட்கள் உட்பட அனைத்தையும் எலிகள் கடித்து சேதம் செய்துள்ளன.
இதனால், இரவிலும் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எலிப் பொறி உட்பட எதுவும் பலனளிக்கவில்லை. இதனால், விரக்தி அடைந்த அருண்குமார் உணவில் எலி மருந்து கலந்து வைத்து எலிகளை கொல்ல திட்டமிட்டார்.
இதையடுத்து கடந்த 15-ம் தேதி இரவு 4 பன் ரொட்டிகளை வாங்கி வந்தார். பின்னர் அன்றைய தினம் இரவு அனைவரும் தூங்கிய பிறகு பன் ரொட்டியில் எலி மருந்தை திணித்து சமையல் அறையில் வைத்துள்ளார். மறுநாள் காலை அருண்குமார் வெளியே சென்றுவிட்டார். வீட்டில் இருந்த லிடியா, எலி மருந்து கலந்தது தெரியாமல் பன் ரொட்டிகளை எடுத்து சாப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அன்று மாலை முதல் அவருக்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டருகே உள்ள மருத்துவரிடம் காண்பித்துள்ளனர். சாப்பிட்ட உணவு உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை எனக் கூறி ஒரு சில மாத்திரை மருந்துகளை மருத்துவர் கொடுத்துள்ளார். அவற்றை சாப்பிட்ட பின்னரும் உடல் நிலை சரியாகவில்லை. இதையடுத்து வீட்டில் என்ன சாப்பிட்டாய் என மனைவியிடம் அருண்குமார் கேட்ட பிறகுதான், அவர் எலி மருந்து கலந்த பன் ரொட்டிகளை சாப்பிட்ட விவரம் தெரியவந்தது.
உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி லிடியா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து ராஜமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.