சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்- தினமும் இரவு 10 மணிக்கு மேல் ரயில்கள் இயங்காது
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கிடையே, சென்னையில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு காரணமாக, சென்னை ரயில்வே கோட்டம் புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்களை செய்துள்ளது.
இதையொட்டி, திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை புதிய காலஅட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் தடத்தில் 150 மின்சார ரயில்கள், சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை தடத்தில் 64 ரயில்கள், சென்னை கடற்கரை-வேளச்சேரி தடத்தில் 68 ரயில்கள், சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் திருமால்பூர் தடத்தில் 152 ரயில்கள் என மொத்தம் 434 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல, இனி ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் தடத்தில் 32 ரயில்கள், சென்னை சென்ட்ரல்-சூலூர்பேட்டை தடத்தில் 24 ரயில்கள், சென்னை கடற்கரை- வேளச்சேரி தடத்தில் 12 ரயில்கள், சென்னை கடற்கரை -செங்கல்பட்டு தடத்தில் 18 ரயில்கள் என மொத்தம் 86 மின்சார ரயில்கள் மட்டும் இயக்கப்படும்.
இரவு நேர ஊரடங்கையொட்டி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை புறநகர் மின்சார ரயில்கள் சேவை இருக்காது. இந்ததிருத்தப்பட்ட புறநகர் ரயில் சேவைகளுக்கான புதிய கால அட்டவணை இன்று முதல் அமலாகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
