

கரோனா பாதிப்பால் சென்னையில், குறிப்பாக ஓஎம்ஆர் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் காலியாக உள்ளன. இதனால் சொத்து வரி, தண்ணீர் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா 2-வது அலை பாதிப்பு அதிகமாக இருப்பதால் இரவு நேர ஊரடங்கையும், ஞாயிறுதோறும் முழு நேர ஊரடங்கையும் தமிழகஅரசு அறிவித்துள்ளது. கரோனா தொற்றால் கடந்த ஆண்டில் இருந்தே பொதுமக்கள் பல்வேறுஇன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
கூலி தொழிலாளி முதல் பெரியதொழிலதிபர்கள் வரை ஏராளமானோருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வரிசையில் வீட்டு உரிமையாளர்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில், குறிப்பாக ஓஎம்ஆர் எனப்படும் பழைய மாமல்லபுரம் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலும் ஐ.டி. ஊழியர்களே வாடகைக்குத் தங்கியிருந்தனர். அதிலும், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் இருந்தனர்.
கடந்த ஆண்டு கரோனா பாதிப்புஏற்பட்டபோது ஐ.டி. ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும்படி நிறுவனங்கள் அறிவுறுத்தியதால், பலரும் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றனர். பலர், வீட்டுக்கு கொடுத்திருந்த அட்வான்ஸ் தொகையை கழித்துக்கொண்டு, வீட்டைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டனர். குடியிருப்புகளில் தங்கியிருக்கும் பலரும் வாடகை தர இயலவில்லை என்று கூறியபடி தொடர்ந்து தங்கியிருக்கிறார்கள்.
`வாடகைதாரர்களிடம் வாடகை கேட்டு வீட்டு உரிமையாளர்கள் அழுத்தம் தரக்கூடாது’ என்று அரசு அறிவுறுத்தியிருக்கும் நிலையில், வீட்டைக் காலி செய்யும்படி அழுத்தம் தர முடியாத நிலையும் நீடிக்கிறது. காலியாக உள்ள வீடுகளுக்கும் யாரும் குடியேற வரவில்லை. இதனால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான வீடுகள் காலியாக உள்ளன.
இதுகுறித்து துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் ரவி கூறும்போது, “எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.8 ஆயிரம் மாத வாடகையில் முன்பு குடியிருந்தனர். கரோனா பாதிப்பு காரணமாக பலரும் வீட்டைக் காலி செய்துவிட்டதால், வீட்டு வாடகையை ரூ.6 ஆயிரம் வரை குறைத்துவிட்டோம். அதன் பிறகும் வீட்டுக்கு யாரும் வரவில்லை. வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சொத்து வரி, தண்ணீர் வரி செலுத்த கூடுதல் அவகாசம் அல்லது அவற்றைத் தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.