

கண்காணிப்புப் பணியின்போது பொதுமக்களிடம் போலீஸார் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னை முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.7.60 லட்சம் பறிமுதல்
மெரினா காமராஜர் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்திச் சோதனையிட்டதில், ரூ.7.60 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, காரில் வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதுடன், பணத்துக்குரிய ஆவணங்களையும் காட்டவில்லையாம். இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், "இரவு ஊரடங்கின்போது கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார், ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். கரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மருத்துவ தேவை மற்றும் பிற அவசரத் தேவைகளுக்காக செல்வோரிடம் உரிய ஆவணங்களைப் பரிசோதித்து, விரைவாக அனுப்பிவைக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவுங்கள்" என்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், போலீஸாருக்கு அறிவுரை வழங்கிஉள்ளார்.