

திருநின்றவூர் ஏரியிலிருந்து ஒரு வாரத்துக்கும் மேலாக நீர் வெளியேற்றப் பட்டும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் இன்னும் முழுமையாக வடியவில்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து இன்னலை சந்தித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்ற வூரில் உள்ள ஈசா ஏரி, சுமார் 835 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 700 ஏக்கர் விளை நிலங்களுக்கான நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஈசா ஏரியின் ஒரு பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் பெரியார் நகர், முத்தமிழ்நகர், கன்னிகாபுரம், சுதேசி நகர் ஆகிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் அன்மையில் பெய்த மழையால் ஈசா ஏரி நிரம்பி வழிந்தது. இதனால் ஏரியின் ஒருபுறம் இருந்த குடியிருப்புகளில் நீர் புகுந்தது.
மழை ஓய்ந்தும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பெரியார் நகர், முத்தமிழ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்கியுள்ளது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்தன.
இதன்காரணமாக ஏரிநீரை திறந்து குடியிருப்பு பகுதியில் வெள்ளத்தை வடியச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியநிலையிலும் ஈசா ஏரியிலிருந்து கடந்த 23-ம் தேதி முதல் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இவ்வாறு ஒரு வாரத்துக்கும் மேலாக நீர் வெளியேற்றப்பட்டும் குடியிருப்பு பகுதிகளில் 4 அடி முதல் 8 அடி வரை உயரம் வரை தேங்கியுள்ள நீர் அதிகப்பட்சமாக ஒன்றரை அடி மட்டுமே வடிந்துள்ளது. இதனால் நீர் தொடர்ந்து தேங்கிய நிலையிலேயே இருக்கிறது.
இதனால், இங்கு வசிக்கும் பொதுமக்களில் சிலர் இப்பகுதியை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். பலர் வேறு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துச் சென்றுவிட்டனர். வாய்ப்பில்லாத பெரும்பான்மையான மக்கள் அதே கழிவு நீர் தேங்கியிருக்கும் பகுதியிலேயே தொடர்ந்து வசித்து வருகின்றனர். இதனால், நீரை முழுமையாக அகற்ற அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.