Published : 22 Apr 2021 03:15 AM
Last Updated : 22 Apr 2021 03:15 AM

ஊரடங்கு அச்சத்தால் மதுரையை விட்டு வெளியேறும் வடமாநில தொழிலாளர்களை தக்க வைக்குமா மாவட்ட நிர்வாகம்? - ஸ்மார்ட் சிட்டி கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் அபாயம்

மதுரை பெரியார் பேருந்து நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

வடமாநிலத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து, மதுரையில் தங்க வைத்து தடையில்லாமல் பறக்கும் பாலம், ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஹோட்டல் தொழில் முதல் கட்டுமானப் பணிகள் வரை தற்போது வடமாநிலத் தொழிலாளர்களைக் கொண்டே நடக்கி றது. பிரம்மாண்ட மேம்பாலங்கள், சாலைகள், வணிக வளாகங்கள்கட்டுமானப் பணிகளில் வடமாநிலத் தொழிலாளர்களே பணிபுரிகின்றனர். மதுரையில் 3 ஆண்டுகளாக ரூ.1,020 கோடியில் 7.3 கி.மீ. நத்தம் பறக்கும் பாலம் மற்றும் 25 கி.மீ.க்கு சாலை, ரூ.900 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் நடந்து வருகின்றன. இவற்றுக்காக வடமாநிலங்களில் இருந்து ஒப்பந்ததாரர்கள் மூலம் வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள், கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களுக்கு அருகிலேயே குடும்பத்தோடு தங்கி பணிபுரிகின்றனர்.

மதுரையில் கடந்த ஆண்டு கரோனாவுக்கு முன்பு வரை சுமார் 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். ஊரடங்குக்குப் பிறகு சாப்பாடு, இருப்பிடம் இல்லாமல் தொற்றுநோய்க்கு பயந்து பெரும்பாலான வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி னர். அதன்பிறகு கரோனா கட்டுப்பாடுகள் குறைந்தபோதும் திரும்பி சென்றவர்களில் குறைவான தொழிலாளர்களே மீண்டும் மதுரைக்கு வந்தனர்.

தற்போது மதுரையில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களைக் கொண்டு நடக்கிறது. வடமாநில தொழிலாளர்கள் பெரும்பாலான வர்கள் திரும்பி வராததோடு உள்ளூர் தொழிலாளர்களும் இது போன்ற கடினப் பணிகளுக்கு வராததால் பணிகள் முன்பிருந்த சுறுசுறுப்பு இல்லாமல் ஆமை வேகத்தில் நடக்கின்றன. பெரியார் பஸ் நிலையம் கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு அக்டோபரில் செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டியது. அதுபோல் வைகை ஆற்றில் குருவிக்காரன் சாலை மேம்பால கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே நிறைவடைந்து இருக்க வேண்டும். அதுபோல் நத்தம் சாலை பறக்கும் பாலப் பணிகளும் ஆமை வேகத்தில் நடப்பதால் அச்சாலையில் செல்வோர் தூசியால் சிரமம் அடைந்துள்ளனர்.

தற்போது மீண்டும் கரோனா ஊரடங்கு அச்சத்தால் வடமாநிலத் தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். அவர்களை தடுத்து அடிப்படை தேவை, இருப்பிடங்களை உறுதி செய்து மதுரையில் நடக்கும் பிரம்மாண்ட கட்டுமானப் பணிகள் தடையில்லாமல் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் கூறியதாவது: வடமாநிலத் தொழிலாளர்கள், இந்த நேரத்தில் வெளியேற முதற்காரணம், நோய் தொற்று அபாயம் ஒருபுறம் இருந்தாலும் அவர்களுக்கான சாப்பாடு, இருப்பிடம் முக்கியமானவை. கடந்த ஆண்டு ஊரடங்கு அறிவித்தபோது பொதுப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதோடு ஹோட்டல்கள் மூடப்பட்டதால் குழந்தைகளுடன் சாப்பாட்டுக்கு சிரமப்பட்டனர். அவர்களை அழைத்து வந்த ஒப்பந்ததாரர்கள் கைவிரித்தனர். அதனாலேயே அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர்.

தற்போது அவர்களுடைய அச்சத்தை அதிகாரிகள் போக்க வேண்டும். அவர்களுக்கு தடுப்பூசி போட வைத்து, உணவு, இருப்பிடத்தை உறுதி செய்ய வேண்டும். இலவசமாக அரிசி, எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். இதைச் செய்தால் அவர்கள் திரும்பிச் செல்ல மாட்டார்கள். தற்போது மீதமுள்ள வடமாநிலத் தொழிலாளர்களும் திரும்பிச் சென்றால், மதுரையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளும் தாமதமாகி மக்களும், வாகன ஓட்டுநர்களும் மிகவும் சிரமப்படுவார்கள். மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்,’’ என்றார்.

மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு திரும்பிச் சென்ற பெரும்பாலான தொழிலாளர்கள் தற்போது வரை திரும்பி வர வில்லை. அதனால் மீதமுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள், உள்ளூர் தொழிலாளர்களை கொண்டு ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஓரளவு நிறைவு செய்து விட்டோம். தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கும் பணிகள்தான் பாதிக்க வாய்ப்புள்ளது.

வடமாநிலத் தொழிலாளர்களை தனிப்பட்ட முறையில் தங்க வைக்க மாநகராட்சி நிர்வாகம் மட்டும் முடிவு செய்துவிட முடி யாது. அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக தங்க வைக்கவும் முடியாது. மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இணைந்து தான் இந்த விஷயத்தில் முடிவு செய்ய வேண்டும்,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x