

தஞ்சாவூரில் தேமுதிகவினர் நேற்று முன்தினம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியதன்பேரில், மேடைக்கு எதிரில் இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை தேமுதிகவினர் அகற்றினர்.
தஞ்சாவூர் தொகுதி எம்எல்ஏ எம்.ரங்கசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் த.குமார் அளித்த புகாரின் பேரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலா ளர் ஜெயபிரகாஷ், வடக்கு மாவட்டச் செயலாளர் பரமசிவம், மாநகரச் செயலாளர் அடைக்கலம் உள்ளிட்ட 59 பேர் மீது 4 பிரிவுகளில் தஞ்சை கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், தேமுதிக மாநகரச் செயலாளர் அடைக்கலம் உள்ளிட்ட 13 பேர் போலீஸாரால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். இவர்கள் தஞ்சாவூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர். தேமுதிகவினர் அளித்த புகாரின்பேரில் தஞ்சையில் அதிமுகவை சேர்ந்த 7 பேர் மீதும், கும்பகோணத்தில் 20-க்கும் மேற்பட்டோர் மீதும் போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.