

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பிற்பகலில் இடி மின்னலுடன் கோடை மழை பெய்தது.
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை மற்றும் நண்பகலில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை நேரங்களில் மழை பெய்வதுமாக காலநிலை உள்ளது. நேற்றும் பிற்பகலில் பலத்த இடி மின்னலுடன் அரைமணி நேரம் மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
பாளையங்கோட்டை- திருவனந்தபுரம் சாலையில் குலவணிகர்புரம் ரயில்வே கேட் பகுதியில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாளையங்கோட்டை தீயணைப்பு படையினர் வந்து மரத்தை வெட்டி அகற்றினர். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகிலும், தருவை பகுதியிலும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அப்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில்ஈடுபட்டதை அடுத்து, மின்விநியோகம் சீரானது.
பாதுகாப்பு வழிமுறைகள்
மழைக் காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து திருநெல்வேலி மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் கி.செல்வகுமார் வெளியிட்செய்திக்குறிப்பு: இடி மின்னலின்போது வெட்ட வெளியிலோ, மரங்கள், மின்கம்பங்கள் அடியிலோ நிற்கக் கூடாது. காங்கிரீட் கூரையிலான கட்டிடங்களில் நிற்கலாம். இடி மின்னலின்போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, செல்போன் மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக் கூடாது.
மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் மின்கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கியிருந்தால் அருகே செல்லக்கூடாது. மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகிலுள்ள மரக்கிளைகளை வெட்ட மின்வாரிய அலுவலர்களை அணுகலாம். மின்தடை நிவர்த்திக்கு 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்தலாம்.
தங்கள் பகுதிகளில் பாதுகாப்பின்றி இருக்கும் பழுதான மின்கம்பங்கள், தாழ்வாக இருக்கும் மின்கம்பிகள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மின்பகிர்வு பெட்டிகள் போன்றவற்றை படத்துடன் முழு முகவரியை குறிப்பிட்டு 9445850811 அல்லது 8903331912 என்ற எண்களுக்கு வாட்ஸ் அப் மூலமோ, எஸ்எம்எஸ் மூலமோ தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டை தீயணைப்பு படையினர் வந்து மரத்தை வெட்டி அகற்றினர். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகிலும், தருவை பகுதியிலும் மின்கம்பங்கள் சாய்ந்தன.