

அன்னவாசல் அருகே வரகுடியில் மஞ்சளாற்றின் குறுக்கே 64 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குறுகிய பாலத்தை அகற்றிவிட்டு, அகலமான புதிய பாலத்தை கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் அன்ன வாசல் ஊராட்சி வடகுடியில் மஞ்சளாற்றின் குறுக்கே உள்ள பாலம், 1957-ம் ஆண்டு அப்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப கட்டப்பட்டது. இந்தப் பாலம் வழியாகத் தான் அன்னவாசல், கழனிவாசல், முத்தூர், நரசிங்கநத்தம், கடக்கம், கிளியனூர், பெரம்பூர் மற்றும் நெடுமருதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் பாலம் குறுகலாக இருப்பதால் லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும், பாலம் குறுகலாக இருப்பதால், அன்னவாசல் பகுதிக்குச் சென்று வந்த ஒரு அரசுப் பேருந்தின் சேவை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டுவிட்டது. மேலும், கழனிவாசல் கிராமத்துக்கு நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து தற்போது வரை பேருந்துகளே இயக்கப்படவில்லை.
இதன் காரணமாக, இப் பகுதிக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு வரும் வெளியூர் பகுதி மக்கள், தனியார் பேருந்தை வாடகைக்கு எடுத்து வருகின்றனர். அவர்களும் மஞ்சளாற்றுப் பாலத்தை கடக்க முடியாததால், பாலத்தின் தொடக்கத்திலேயே பேருந்தை நிறுத்திவிட்டு, அங்கிருந்து இறங்கி நடந்து செல்கின்றனர்.
எனவே, 64 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மஞ்சளாறு பழைய பாலத்தை அகற்றி விட்டு, அதே இடத்தில் அகலமான புதிய பாலத்தை கட்டித்தர வேண்டும்.
மேலும், கனரக வாகனங்கள் செல்ல வசதியாக, பாலத்தின் அருகிலுள்ள வாகை மரத்தின் மரக்கிளைகளை அகற்ற வேண்டும். நிறுத்தப்பட்ட அன்னவாசல் பகுதி பேருந்து சேவையை மீண்டும் தொடங்குவதுடன், கழனிவாசல் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.