அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்
Updated on
1 min read

அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை நீடிக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவ மழை தொடங்கிய சில நாட்களிலேயே சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை பகல் வரை பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திங்கள்கிழமை காலை 8.30 மணி வரை நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுக்குப்பத்தில் 7 செ.மீ. மழையும், திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் 6 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூரில் 5 செ.மீ., சென்னை காமராஜர் சாலை யில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மழை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித் துள்ளனர்.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறியதாவது:

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் ஈரப்பதத்தை வங்கக்கடல் உறிஞ்சியதன் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை மழை பெய்துள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in