Published : 22 Apr 2021 03:15 AM
Last Updated : 22 Apr 2021 03:15 AM

தூத்துக்குடி - மதுரை இடையே பராமரிப்பின்றி காணப்படும் தேசிய நான்கு வழிச்சாலை

தூத்துக்குடி - மதுரை இடையேயான நான்குவழிச்சாலை பராமரிப்பின்றி கைவிடப்பட்டதால் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்துள்ளனர்.

தூத்துக்குடி - மதுரை இடையிலான மாநில நெடுஞ்சாலை, கடந்த 2007-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின், தூத்துக்குடி - மதுரை இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு, தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. சாலையின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வந்தது. தற்போது, வாகனங்கள் செல்வதற்கே மிகவும் சிரமமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பராமரிப்பு பணி என்ற பெயரில் மேலடுக்கு தார்க் கலவையை பல இடங்களில் பெயர்த்து எடுத்துவிட்டனர். இதனால், சாலை மிகவும் மோசமடைந்து, வாகனங்களின் டயர் தேய்மானம் அதிகமாகி வருகிறது.

தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியாபுரம், மதுரை அருகே எலியார்பட்டி ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. தினமும் லட்சக்கணக்கான ரூபாய் வருமானமும் கிடைக்கிறது. ஆனால், சாலையை சீரமைப்பதில் மெத்தனம் காட்டப்படுகிறது.

இதே போல், ஒவ்வொரு கிராம விலக்குகளிலும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் பல இடங்களில் எரியவில்லை. இரவு நேரங்களில் வரக்கூடிய வாகனங்கள் `யு’ வளைவு இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்குகின்றன. எனவே, தூத்துக்குடி - மதுரை இடையே நான்குவழிச்சாலையில் விரைந்து பராமரிப்பு பணிகளை முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ. வரதராஜன் கூறும்போது, ``தூத்துக்குடி துறைமுகத்துக்கு அதிகளவு சரக்கு வாகனங்களின் போக்குவரத்து இருப்பதை கருத்தில் கொண்டு தான், தூத்துக்குடி முதல் மதுரை வரையில் நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டது.

ஆனால், அதன் பின்னர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில் சுணக்கம் காட்டி வருகின்றனர். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முதற்கட்டமாக நான்குவழிச்சாலையின் மேலடுக்கில் உள்ள தார்க்கலவை அகற்றப்பட்டது. ஆனால், அந்த இடங்களில் புதிதாக தார்ச்சாலை அமைக்கவில்லை. திடீரென ஒரு மாதம் வேலை செய்வார்கள். அதன் பின்னர் அப்படியே விட்டுவிடுவார்கள். இதனால், இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் கூட பயணிப்பது சாகசமாக உள்ளது.

மேலும், பெரிய கனரக வாகனங்கள், அரசு பேருந்துகளின் டயர்களின் தேய்மானம் அதிகமாகிறது. இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இச்சாலையை ஆய்வு செய்து, உடனடியாக சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x