Published : 22 Apr 2021 03:15 AM
Last Updated : 22 Apr 2021 03:15 AM

அய்யநேரி கிராமத்தில் மண் அள்ளப்பட்டதால் தூர்ந்த கண்மாய்: கோவில்பட்டி அருகே விவசாயம் பாதிக்கும் அபாயம்

கோவில்பட்டி அருகே அய்யநேரி கண்மாயில் ஜேசிபி மூலம் மண் அள்ளியதால் பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன.

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே அய்யநேரி கிராமத்தில் உள்ள கண்மாயில் ஆங்காங்கே சரள் மண் அள்ளப்பட்டதால் தூர்ந்து போய், மழைநீர் தேங்கினாலும் விவசாயத்துக்கு பயனில்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவில்பட்டி அருகே அய்யநேரி கிராமத்தில் சுமார் 128 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் சுமார் 200 ஏக்கர் வரை பாசன வசதி பெற்று வருகின்றன. இங்குள்ள நிலங்களில் நெல், வாழை மற்றும்கரும்பு ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த கண்மாய்க்கு மழைக்காலங்களில் காட்டாற்று ஓடையில் இருந்து தண்ணீர்வருகிறது. இந்த கண்மாயில் நீர்நிரம்பினால் ஒரு ஆண்டுக்கு வற்றாமல், முப்போக விளைச்சலுக்கு பலன் கொடுத்து வந்தது. இதில், வனத்துறை சார்பில் நீர் கருவேலம் மரங்கள் நடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கடந்த ஆண்டு இந்த கண்மாயில் இருந்து டிப்பர் லாரிகளில் மண் அள்ளப்பட்டு வந்தது. கண்மாயில் ஆங்காங்கே ஜேசிபி மூலம் மண் அள்ளியதால், சுமார் 5 அடி முதல் 8 அடி வரையிலான பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதனால், கண்மாய் மடை பகுதிக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெய்த கன மழையில் கூட, கண்மாய் தண்ணீர் முழுமையாக விவசாயத்துக்கு பலன் கொடுக்கவில்லை.

எனவே, கண்மாயை முறையாக தூர்வாரி சமன் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வழக்கறிஞர் எஸ்.ரெங்கநாயகலு கூறும்போது, அய்யநேரி கண்மாய்க்கு வரும்நீர்வரத்து ஓடைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், முறையாகதண்ணீர் வருவதில்லை. இதற்கிடையே, கண்மாயில் இருந்து முறைகேடாக வீடு கட்டுவதற்கும், வேறு சில பணிகளுக்கும் சரள் மண் அள்ளப்பட்டு உள்ளது. இதனால், கண்மாயில் பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதன்காரணமாக மடை பகுதிக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. மேலும், மழைக்காலத்திலும் தண்ணீர் நிற்க வாய்ப்பில்லாத நிலையை உருவாக்கி விட்டனர். இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது, என்றார் அவர்.

கண்மாயில் ஆங்காங்கே ஜேசிபி மூலம் மண் அள்ளியதால், சுமார் 5 அடி முதல் 8 அடி வரையிலான பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x