

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 72 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் புதிதாக 4 ஆயிரம் டோஸ் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி வரப்பெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட் டத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் தினசரி சராசரியாக 100 எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை சுமார் 21 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 291 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி 45 வயதுக்கு அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தி வருகின்றனர். அத்துடன் சிறப்பு முகாம்கள் மூலம் இந்தப் பணியை வேகப் படுத்தியுள்ளனர். திருவண்ணா மலை மாவட்டத்தில் தினசரி சராசரியாக 2 ஆயிரம் முதல் 2,500 பேர் வரை கரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் 190 மையங்கள் மூலமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தினசரி செயல்படுத்தி வருகின்றனர்.
72 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
தி.மலை மாவட்டத்தில் இதுவரை சுமார் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்துக்கு 6 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி வரப்பெற்றுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நேற்று 4 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வரப்பெற்றுள்ளது.
இது குறைந்த எண்ணிக்கையாக இருந்தாலும் தேவை இருக்கும் இடங்களுக்கு தடுப்பூசியை அனுப்பி வைக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
1,500 டோஸ் கையிருப்பு
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில்கூறும்போது, ‘‘திருவண்ணா மலை மாவட்டத்தில் ஏற்கெனவே கையிருப்பில் 1,500 டோஸ் கரோனா தடுப்பூசி உள்ளது. தற்போது, 4 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வரப்பெற்றுள்ளது. தினசரி சராசரியாக 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுவதால் இரண்டு நாளைக்கு போதுமானதாக இருக்கும்.
தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை
அதேநேரம், தடுப்பூசி காலியாக, காலியாக தினசரி அரசிடம் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் எங்களுக்கு சப்ளை இருக்கும் என கூறியுள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 பேருக்கும் அதிகமாக வேலை செய்யும் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டால் அவர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடுகளை செய்துள்ளோம்’’ என தெரிவித்தனர்.