Published : 22 Apr 2021 03:15 AM
Last Updated : 22 Apr 2021 03:15 AM

வந்தவாசியில் சோகத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவரின் உயிரிழப்பு

விபத்தில் உயிரிழந்த நவாஸ்.

வந்தவாசி

வந்தவாசி அருகே குடும்ப சூழ்நிலையால் பகுதி நேர வேலை செய்துகொண்டே கல்லூரி படிப்பு படித்து வந்த மாணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வந்தவாசி கலுங்கு மரைக்காயர் தெருவைச் சேர்ந்த திருமண ஏற்பாடு தொழில் செய்து வந்தவர் அபீப் ரகுமான் (50). இவருக்கு, மன்சூர்(23), முகமது நவாஸ் (21), ஆரிப்(15) ஆகிய 3 மகன்களும், நசீலா (20) என்ற மகளும் உள்ளனர். இவர்களில் படிப்பில் ஆர்வம் கொண்ட நவாஸ், குடும்ப வறுமை காரணமாக பகுதி நேரமாக கடைகளில் வேலை செய்து கொண்டே படித்து வந்தார். அபீப் ரகுமானின் குடும்பத்தில் இருந்து கல்லூரிக்கு சென்றவர் நவாஸ். செய்யாறு அரசினர் கலைக் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

கடந்த புதன்கிழமை தமிழ் புத்தாண்டு விடுமுறை என்பதால் மழையூர் கிராமத்தில் ஆடுகள் அதிகளவில் வெட்டப்பட்டன. அங்கு சென்று ஆடுகளின் தோலை உரித்து எடுத்து வருவதற்காக மழையூர் கிராமத்துக்கு புறப்பட்டார். வந்தவாசியில் இருந்து மும்முனி புறவழிச்சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத டிராக்டர் மோதியதில் நவாஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை அவ் வழியாகச் சென்றவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக் காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப் பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இது தொடர்பான புகாரின்பேரில் வந்தவாசி தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் குறித்து விசாரித்து வருகின்றனர். சிறு வயதில் இருந்தே கிடைக்கின்ற வேலைகளை செய்து கல்லூரி வரை படித்து வந்த நவாஸ் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடமும் நண்பர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x