Published : 21 Apr 2021 07:20 PM
Last Updated : 21 Apr 2021 07:20 PM

இருசக்கர வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டுக் கருவி: உயர் நீதிமன்றம் உத்தரவு

இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்த மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சாலையில் பெண் பல் மருத்துவர் ஒருவர் பயணித்த இருசக்கர வாகனத்தில், அரசுப் பேருந்து மோதியது. அதில் பலத்த காயமடைந்த பெண் பல் மருத்துவரின் உடலில் 90 சதவீதக் குறைபாடு ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த மோட்டார் வாகனத் தீர்ப்பாயம், 18 லட்சத்து 43 ஆயிரத்து 908 ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்தது. குறைவான தொகை நிர்ணயிக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்தனர்.

அந்த வழக்கில் நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், பூரண நலமுடன் இருந்திருந்தால், அவரது வருமானம் உயர்ந்திருக்கும் என்ற அடிப்படையில், இழப்பீட்டை 1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 548 ஆக உயர்த்தி நிர்ணயித்துள்ளனர். அந்தத் தொகையை 2013ஆம் ஆண்டிலிருந்து 7 சதவீத வட்டியுடன், 12 வாரத்தில் விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டனர்.

மேலும், அந்தத் தீர்ப்பில் விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவதுதான் காரணம் எனக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், வேகக்கட்டுப்பாட்டைக் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டனர்.

பைக் ரேஸ் செல்லும் இளைஞர்கள்

எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்று மத்திய அரசு 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

2009 மற்றும் 2019ஆம் ஆண்டுகளின் புள்ளி விவரங்களை ஒப்பிடும்போது, இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை விபத்துகளில் சிக்கி மரணம் அடைவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதைக் குறிப்பிட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

2020ஆம் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்துக் கழக அறிக்கையின்படி, ஒரு மணி நேரத்திற்கு 6 இருசக்கர வாகன ஓட்டிகள் பலியாவதாகத் தெரிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனால் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தியிருக்க வேண்டுமென உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய பைக்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவதைக் கட்டாயமாக்க வேண்டுமென உத்தரவிட்டனர். ஓட்டுநர் உரிமம் வழங்கும்போது பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் வாகனங்களை இயக்குவது எப்படி எனக் கற்றுக்கொடுக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

பள்ளிப் பாடத்திட்டங்களில் சாலை விதிகளையும் சேர்த்துக் கற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வேகத்தைக் குறைப்பது, வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவது தொடர்பான, இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x