

வடமாநிலத் தொழிலாளர்களுடைய ஊரடங்கு அச்சத்தைப் போக்கி தடுப்பூசி போடவைத்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மதுரையில் தங்க வைத்து தடையில்லாமல் மேம்பாலம், ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் நடப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஹோட்டல் தொழில் முதல் கடினமான கட்டுமானப்பணிகள் வரை தற்போது வடமாநிலத் தொழிலாளர்களை கொண்டே பெரும்பாலும் நடக்கிறது. பிரம்மாண்ட மேம்பாலங்கள், சாலைகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டுமானப்பணிகளில் முழுக்க முழுக்க தற்போது வடமாநிலத் தொழிலாளர்களே பணிபுரிகின்றனர்.
மதுரையில் கடந்த 3 ஆண்டுகளாக ரூ.1,020 கோடியில் 7.3 கி.மீ.,
நத்தம் பறக்கும் பாலம் மற்றும் 25 கி.மீ.,க்கு சாலை, ரூ.960 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் நடக்கிறது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் பெரியார் பஸ்நிலையம், வைகை ஆறு பாலம் கட்டுமானப்பணிகள் நடக்கிறது.
மதுரையில் நடக்கும் இந்த பிரமாண்டப் பணிகளுக்காக வடமாநிலங்களில் இருந்து ஒப்பந்ததாரர்கள் மூலம் வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள், கட்டுமானப்பணிகள் நடக்கும் அருகிலே குடும்பத்தோடு வந்து தங்கியிருந்து பணிபுரிகின்றனர்.
மதுரையில் கடந்த ஆண்டு கரோனாவுக்கு முன் வரை சுமார் 2,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பணிபுரிந்து வந்தனர். கரோனா ஊரடங்கு அமலானதால் சாப்பாடு, இருப்பிடம் இல்லாமல் தொற்று நோய்க்குப் பயந்து பெரும்பாலான வடமாநிலத் தொழிலாளர்கள் ரயில்கள், பஸ்கள் மற்றும் கால்நடையாகவும் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் சென்றனர்.
அதன்பிறகு கரோனா ஊரடங்கு குறைந்தபோதும் திரும்பிச் சென்றவர்களில் குறைவான தொழிலாளர்களே மதுரைக்கு வந்தனர். தற்போது ‘ஸ்மார் சிட்டி’ பணிகள், நத்தம் பறக்கும் பாலம் மற்றும் மற்ற கட்டுமானப்பணிகள் 500க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களைக் கொண்டு நடக்கிறது.
வடமாநிலத் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் திரும்பி வராததோடு உள்ளூர் தொழிலார்களும் இது போன்ற கடினப்பணிகளுக்கு வராததால் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள், நத்தம் பறக்கும் பாலம் பணிகள் முன்பிருந்த சுறுசுறுப்பு இல்லாமல் ஆமைவேகத்தில் நடக்கிறது.
பெரியார் பஸ்நிலையம் கட்டுமானப்பணிகள் கடந்த ஆண்டு அக்டோபரிலே திறந்து செயல்பாட்டிற்கு வந்திருக்க வேண்டியது. அதுபோல், வைகை ஆறு மேம்பாலம் கட்டுமானப்பணிகள் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே நிறைவடைந்து இருக்க வேண்டும்.
ஆனால், தற்போது வரை பஸ்நிலையம் கட்டுமானப்பணிகள் நிறைவடையவில்லை. அதுபோல், நத்தம் பறக்கும் பாலம் பணிகளும் ஆமைவேகத்தில் நடப்பதால் அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், தினமும் புழுதி படிந்தும், சாலைகளில் உள்ள குண்டு, குழிகளில் வாகனங்கள் ஏறி, இறங்கிச் செல்வதால் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டனர்.
தற்போது கரோனா ஊரடங்கு அச்சத்தால் மீண்டும் வடமாநிலத் தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளையும், இருப்பிடங்களையும் உறுதி செய்து அரசுத் சார்பில் மதுரையில் நடக்கும் பிரம்மாண்ட கட்டுமானப்பணிகள் தடையில்லாமல் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் கூறுகையில், ‘‘வடமாநிலத் தொழிலாளர்கள், தமிழக நகரங்களை விட்டு இந்த நேரத்தில் வெளியேறுவதற்கு முதற்காரணம், நோய்த் தொற்று அபாயம் ஒரு புறம் இருந்தாலும் அவர்களுக்கான சாப்பாடு, இருப்பிடம் போன்றவை முக்கியமானவை. கடந்த ஆண்டு ஊரடங்கு அறிவித்தபோது பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதோடு ஹோட்டல்கள் மூடப்பட்டதால் குழந்தைகளுடன் சாப்பாட்டிற்கு மிகவும் சிரமப்பட்டனர். அவர்களை அழைத்து வந்த ஒப்பந்ததாரர்கள் கைவிரித்தனர்.
அதனாலேயே அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர். தற்போது அவர்களை நிறுத்தி தக்க வைக்க, அவர்களுடைய அச்சத்தை அதிகாரிகள் போக்க வேண்டும். அவர்களுக்கு தடுப்பூசி போடவைத்து, அவர்களுக்கான உணவு, இருப்பிடத்தை உறுதி செய்ய வேண்டும்.
இலவசமாக ரேஷன் அரிசி, எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட முக்கிய மளிகைப் பொருட்களை வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். இதைச் செய்தாலே போதும் அவர்கள் திரும்பிச் செல்ல மாட்டார்கள்.
தற்போது மீதமுள்ள வடமாநில தொழிலாளர்களும் திரும்பி சென்றால் அவர்களை திருப்பி அழைத்து வந்து மதுரையில் நடக்கும் பிரமாண்ட கட்டுமானப்பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு நீண்ட மாதமாங்களாகும். பணிகளும் தாமதாகி மக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுவார்கள். மாவட்ட நிர்வாகம், கவனம் செலுத்தி வடமாநிலத் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், ’’ என்றார்.
மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டே திரும்பிச் சென்ற பெரும்பாலான தொழிலார்களே தற்போது வரை திரும்பி வரவில்லை.
அதனால், மீதமுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள், உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டு ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஒரளவு நிறைவு செய்துவிட்டோம். தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கும் பணிகள்தான் பாதிக்க வாய்ப்புள்ளது.
வடமாநிலத் தொழிலாளர்களை தனிப்பட்ட முறையில் தங்க வைக்க மாநகராட்சி மட்டுமே முடிவு செய்துவிட முடியாது. அவர்களை விருப்பதற்கு மாறாக தங்க வைக்கவும் முடியாது. மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் இணைந்துதான் இந்த விஷயத்தில் முடிவு செய்ய வேண்டும், ’’ என்றார்.