Last Updated : 12 Dec, 2015 07:37 PM

 

Published : 12 Dec 2015 07:37 PM
Last Updated : 12 Dec 2015 07:37 PM

ஃபேஸ்புக்கின் ரமணன்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!

தமிழக மக்களுக்கு எப்படி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் பிரபலமோ, அதற்கு சற்றும் குறையாமல் சமூக வலைதளங்களில் தமிழக நெட்டிசன்களின் முக்கிய வானிலை முன்னறிவிப்பாளர் பிரதீப் ஜான்!

'தமிழ்நாடு வெதர்மேன்' அண்மைக்காலமாக அதிகம் பின்தொடரப்பட்ட ஃபேஸ்புக் பக்கம் இது. இதன் சொந்தக்காரரான வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான். மழைப்பொழிவின் மீது தனக்கு ஏற்பட்ட தீரா ஆர்வத்தை விவரிக்கிறார்.

மழையை மட்டுமே பார்த்த நம்மில் பலரும் அதி கனமழை, பெருமழை போன்றவற்றை சந்தித்துவிட்டோம். 'எல் நினோ' என்றால் என்னவென்று கூகுள் தேடலை தொடங்கிவிட்டோம். செய்தி சேனல்களில் கடைசியாக சொல்லப்பட்ட வானிலை முன்னறிவிப்பு பிரைம் டைம் ஸ்டோரியாகிவிட்டது. செய்தித்தாளில் உள்பக்கத்தில் கட்டம் கட்டி வைக்கப்பட்டிருந்த வானிலை நிலவரம் பேனர் செய்தியாகிவிட்டது. பெருமழை பெரிய மாற்றங்களை செய்துவிட்டுச் சென்றிருக்கிறது.

இந்நிலையில், சென்னையை பெருமழை புரட்டிப்போட்ட காலகட்டத்தில் தொடர்ந்து வானிலை அறிவிப்புகளை பகிர்ந்து வெளிநாட்டு ஊடகங்கள் சில ஏற்படுத்திய பீதியை நீக்கி அசராமல் பணியாற்றிக் கொண்டிருந்தார் பிரதீப் ஜான்.

யார் அந்த பிரதீப் ஜான், இளம் வயதில் கவிதைக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்தும் மழையை எப்படி இவர் வேறு கோணத்தில் பார்க்கத் துவங்கினார்?

1996 ஜூன் மாதம். பிரதீப் ஜானின் வாழ்க்கையை மாற்றியது வானிலை மாற்றம். தொடர்ச்சியாக மூன்று நாட்களில் சென்னையில் 700 மி.மீ மழை பெய்திருந்தது. சாலைகளில் வெள்ளம் பாய்ந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கிப்போயினர். நகரமே முடங்கியது.

இவையெல்லாம் நடந்தபோது பிரதீப் ஜானுக்கு வயது 14. மழையின் காரணமாக பிரதீப்பை வீட்டை விட்டே வெளியேறக்கூடாது என முடக்கினர் பெற்றோர். வெற்று சிந்தனையை விரட்ட பால்கனியில் தஞ்சம் புகுந்தார் பிரதீப். அந்த நொடியில் இருந்து அடுத்த 36 மணி நேரத்தை அங்கேயே செலவழித்தார்.

அந்த அனுபவத்தை விவரித்த பிரதீப் (33), "அந்த 36 மணி நேரமும் மழை என்னை முற்றிலுமாக ஆட்கொண்டிருந்தது. மழை கம்பிகள் தற்காலிக குட்டைகளை நிமிடத்துக்கு நிமிடம் பெரியதாக்கிக் கொண்டிருந்தன. என்னால் மழைப்பொழிவின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அனுபவம் இளைப்பாறுதல் தருவதாகவும் அழகியல் சார்ந்ததாகவும் இருந்தது" என்றார்.

தற்செயலாக ஏற்பட்ட அந்த அனுபவத்துக்குப் பின்னர் மழைப்பொழிவை பதிவு செய்வதை பிரதீப் சிரத்தையுடன் செய்யத் தொடங்கினார். அகும்பே, ஹல்லிகல், சிரபுஞ்சி, குட்டியாடி, சின்ன கல்லார், தலக்காவிரி மற்றும் பிற இடங்களில் பிரதீப் மழைப் பொழிவை பதிவு செய்து கண்காணித்து வருகிறார். நாடு முழுவதும் எப்போது எந்தப் பகுதியில் பெருமழை பெய்தது என்றால் கணிணியை சொடுக்காமல் கண் இமைக்கும் நேரத்தில் தன் ஞாபக சக்தியை தட்டிவிட்டுச் சொல்கிறார்.

இந்தியன் வெதர் மேன், வேகரீஸ் ஆஃப் வெதர், கீ வெதர் போன்ற பல்வேறு வானிலை முன்னறிவிப்பு இணையதளங்களுக்கு இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

"வானிலையை கணிப்பது நேர விரயம், மிகவும் கடினமானது. இதை ஏன் செய்கிறாய் எனப் பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை வானிலையை கணிப்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது என்னுடைய பேரார்வம்" என்கிறார் பிரதீப்.

ஆர்குட்டின் தீவிர விசிறியாக இருந்த பிரதீப் 2012-ல் தான் ஃபேஸ்புக்கில் தனக்கென ஒரு பக்கத்தை உருவாக்கினார். 'தமிழ்நாடுவெதர்மேன்' (Tamilnaduweatherman) என்ற அந்த பக்கத்துக்கு இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் வெறும் 1000 லைக்குகள் மட்டுமே இருந்தது. ஆனால், நவம்பர் மழை மக்களை வானிலை முன்னறிவிப்புகளை தேடி அலையவிட்டதில் அவரது ஃபேஸ்புக் பக்கத்துக்கு 64,000 லைக்குகள் கிடைக்கச் செய்துள்ளது.

இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் அண்மையில் சென்னை வானிலை தொடர்பாக இவர் பதிந்த நிலைத்தகவல் 2 லட்சம் பேரைச் சென்றடைந்துள்ளது. சாலைகளில் மழை வெள்ளம் கரை புரள அவரது ஃபேஸ்புக் இன்பாக்ஸில் குறுஞ்செய்திகள் வெள்ளம் புகுந்தது. "என் வீட்டில் நான் இருக்கலாமா? இப்போது திருமணத்தை நடத்தலாமா? என் கணவர் வேலைக்குச் செல்லலாமா? என பல்வேறு கேள்விகள் அவருக்கு வந்தன.

பெருமழையினால் சென்னை தத்தளித்த நாட்களில் எல்லாம் பிரதீப் தூக்கம் தொலைத்து வானிலையை கண்காணித்துக் கொண்டிருந்திருக்கிறார். கனமழை எச்சரிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க மெனக்கெட்டுக் கொண்டிருந்தார். என்னதான் தொலைக்காட்சிகளில் வானிலை முன்னறிவிப்புகள் வந்து கொண்டிருந்தாலும் 'தமிழ்நாடுவெதர்மேன்' ஃபேஸ்புக் பக்கத்தை நாடுவோர் குறையவில்லை. சென்னையில் ஆயிரக் கணக்கில் வானிலை வலைப்பதிவர்கள் இருந்தாலும் பிரதீப்பின் கணிப்பு தனித்துவத்துடன் பளிச்சிட்டது. அதற்கான காரணத்தை பிரதீப் கூறும்போது, "வானிலை முன்னறிவிப்புகளில் நான் தொழில்நுட்ப வார்த்தைகளை புகுத்துவது இல்லை. மக்களுக்கான தேவை எவ்வளவு மழை பெய்யும், அதனால் வெள்ளம் ஏற்படுமா என்பது மட்டுமே. அவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தை ஜாலங்களில் அக்கறை இல்லை என்பதை புரிந்து கொண்டேன்" என்றார்.

சென்னை தத்தளித்த வேளையில் துல்லிய கணிப்பை தர துடித்துக் கொண்டிருந்த பிரதீப்புக்கு சவாலாக இருந்தது கருமேகம் அல்ல சில ஜோதிடர்களின் ஆதாரமற்ற கணிப்புகளும், சமூக வலைதளங்களில் பரப்பிவிடப்பட்ட பஞ்சாங்க கணிப்புகளுமே. அந்த பீதியிலிருந்து மக்களை வெளிக்கொணரும் சமூக பொறுப்பு பிரதீப்புக்கு இருந்துள்ளது.

அந்த பொறுப்பைப் பற்றி பிரதீப் விவரிக்கும்போது, "வானிலை முன்னறிவிப்புகளை தரும் சிலர் சிஎஃப்எஸ் என்று சொல்லப்படும் கிளைமேட் ஃபோர்காஸ்ட் சிஸ்டம் என்ற நீண்ட நாட்களுக்கான தரவுகள் அடிப்படையில் கணிப்புகளை வெளியிடுகின்றனர். அதன் அடிப்படையில் அடுத்த மாதம் மழை பெய்யும் என்ற கணிப்புகளைக் கூறுகின்றனர். ஆனால், அவை துல்லியமானது அல்ல. ஏனெனில் வானிலை என்பது அன்றாடம் உருமாறும் தன்மை கொண்ட நிகழ்வு.

வானிலை ஆய்வு மையமும் முன்னறிவிப்புகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்குகின்றன. ஆனால், அவர்கள் இதுவரை ஃபேஸ்புக் பக்கத்தையோ, ட்விட்டர் பக்கத்தையோ பிரத்யேகமாக உருவாக்கவில்லை. எனவே, அண்மையில் பெய்த பெருமழை குறித்த தகவல்களைப் பெற மக்கள் இணையத்தை நாடினர். இந்த தருணத்தில்தான் வானிலை வலைப்பதிவர்கள் மக்களுக்கு அருமருந்தாகிவிட்டனர். மக்களுடன் இடைவிடாத தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதால் என்னைப் போன்ற வானிலை ஆர்வலர்கள் மீது மக்கள் அதீத நம்பிக்கை கொண்டனர். மக்களின் நம்பிக்கை என்னை நெகிழ வைத்துள்ளது. இப்போது எனக்கான பொறுப்பும் கூடியிருக்கிறது" என்றார்.

டிசம்பர் 1, 2 வெள்ளம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்னதாக பிபிசி வெதர் மற்றுமொரு எச்சரிக்கையைப் பதிவு செய்தது. ஏற்கெனவே பிபிசி கணித்த 50 செ.மீ மழையளவில் கிட்டத்தட்ட 49.4 செ.மீ மழை தாம்பரத்தில் பதிவானதால் பிபிசி கணிப்பை புறக்கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சிலர் வீடுகளை காலி செய்யத் தொடங்கினர். செய்வதறியாது பலர் திகைத்து நின்றனர். அந்த வேளையில்தான் பிரதீப் பிபிசி கணிப்பு தவறு என்று விளக்கத்துடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நிலைத்தகவலை பதிவு செய்தார். அவர் சொன்னபடியே வறண்ட வானிலை தொடர்வதால் அவரது கணிப்பின் மீதான நம்பகத்தன்மை மேலும் அதிகரித்துள்ளது.

"பிபிசி-க்கு வானிலையை கணித்துச் சொன்னவர் என்னைப் போல் ஒருவரே. நாம் எதைப் பார்க்கிறோமோ அதையே அவர்களும் பார்க்கின்றனர். முன்னறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் சற்று பொறுமை காக்க வேண்டியது அவசியம் என அவர்கள் தெரிந்திருக்கவில்லை. மேலும், இத்தகைய முன்னறிவிப்பு பாதிக்கப்பட்ட மக்களை உளவியல் ரீதியாக எவ்வித உளைச்சலுக்கு ஆளாக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. உள்ளூர் வானிலை நிலவரத்தை நன்கு அறிந்திருந்த என்னைப் போன்ற வானிலை ஆர்வலர்கள் யாரும் பீதியடையவில்லை. எங்களுக்குத் தெரிந்திருந்தது சென்னையில் இனி கனமழைக்கு வாய்ப்பில்லை என்பது" என பிரதீப் அவரது ஃபேஸ்புக்கில் பதிர்ந்திருந்தார்.

வானிலை மீது காதல் கொண்ட பிரதீப் படித்தது என்னவோ கணினி அறிவியல். ஏன் என்று வினவினால் பெற்றோர் நிர்பந்தம் என்கிறார். பின்னாளில் பங்குச் சந்தை மீது ஏற்பட்ட ஈர்ப்பால் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்றிருக்கிறார். தற்போது தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதியத்தில் (Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited) இணை மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரது இந்தப் பணி வானிலையை கணிப்பதில் கூடுதல் புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் அவரது மனதில் நிறைந்திருப்பது வானிலை ஆர்வம் மட்டுமே. அப்படி என்றால் நீங்கள் ஏன் வானிலை மையத்தில் பணி புரியவில்லை என்ற கேள்விக்கு, "நான் அதற்கான பட்டப்படிப்பை படிக்கவில்லை. அதுமட்டுமல்லாது அங்கு பணியில் சேர்ந்தால் எனது கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்க வாய்ப்பிருந்திருக்காது" என்றார்.

"நான் காலை படுக்கையில் இருந்து எழுந்தவுடன் சரி பார்க்கும் முதல் விஷயம் வானிலை. நான் கண் அயர்வதற்கு முன் கடைசியாக அப்டேட் செய்யும் விஷயமும் வானிலையே" என்கிறார் புயலை பின்தொடரும் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்.

அவரது வானிலை பேரார்வத்தின் வெளிப்பாடாக சென்னையில் கடந்த 2010-ல் லைலா புயல் நிலை கொண்ட போது இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு தனது வலைப்பதிவை அப்டேட் செய்திருக்கிறார். வங்கக் கடலில் ஏதாவது புயல் நிலைகொண்டால் அவரது கண்களில் தூக்கம் இமை கடந்து விடுகிறது.

"வானிலை முன்னறிவிப்புகளை அப்டேட் செய்வதற்காக அன்றாடம் அலுவலகத்துக்கு கால தாமதாக சென்ற நாட்களும் உண்டு. ஆனால், இப்போதெல்லாம் என் மகனை பள்ளியில் விட வேண்டியிருப்பதால் காலை நேரத்தில் வானிலையுடன் உறவாடும் நேரம் குறைந்துவிட்டது. இரவிலும் அப்படித்தான் என் மனைவி திட்டினால் லேப்டாப்பை மூடி வைத்துவிட்ட வேறு வேலை செய்வது போல் சால்ஜாப்பு செய்துவிட்டு பின்னர் அவர் தூங்கியவுடன் மீண்டும் வானிலையை கவனிப்பேன்" என புன்னகை பூக்கிறார் பிரதீப் ஜான்.

தமிழ்நாடு வெதர்மேனின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம் ->https://www.facebook.com/tamilnaduweatherman

-தமிழில்:பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x