கடலூர் அருகே பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்த நல்ல பாம்பு
கடலூர் அருகே மீன்பிடி வலையில் சிக்கி மயங்கிய நல்ல பாம்புக்கு விலங்குகள் நல ஆர்வலர் செல்லா பாட்டிலில் தண்ணீர் கொடுத்து, அதனைக் காப்பாற்றி, பாதுகாப்பாக வனத்துறை உதவியுடன் காப்புக் காட்டில் விட்டார். செல்லாவின் இந்தச் செயல் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றது.
கடலூர் அருகே உள்ள வசந்தராயன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் மீன் பிடிக்கும் வலையில் 2 நாட்களுக்கு முன் சிக்கிய நல்ல பாம்பு ஒன்று மயங்கிக் கிடந்தது. பாம்பு உயிரிழந்துவிட்டது என்று நினைத்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து இன்று (ஏப்.21) கடலூர் விலங்குகள் நல ஆர்வலர் செல்லாவுக்குத் தகவல் தந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (ஏப்.21) மதியம் 12 மணிக்கு அந்தப் பகுதிக்குச் சென்ற செல்லா உயிரிழந்துவிட்டதாகக் கூறப்பட்ட நல்ல பாம்பைப் பார்த்துள்ளார். இது உயிரிழக்கவில்லை, மயங்கியுள்ளது என்பதை அறிந்து கொண்ட அவர், பாம்பு குடிக்க பாட்டிலில் தண்ணீர் கொடுத்தார். கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் குடித்த நல்ல பாம்பு, ஆக்ரோஷமாகப் படம் எடுத்து ஆடத் தொடங்கியது. பின்னர் செல்லா லாவகமாகப் பாம்பைப் பிடித்து, பாதுகாப்பாக எடுத்துச் சென்று வனத்துறை உதவுயுடன் வேப்பூர் காப்புக் காட்டில் விட்டார்.
இதுகுறித்துச் செல்லா கூறுகையில், ''வெயில் காலத்தில் காட்டுப் பகுதியில் தண்ணீர் இல்லாமல் இருப்பதால் வனப்பகுதியில் இருக்கும் பாம்புகள் உள்ளிட்ட அனைத்து விலங்கினங்களும் குடியிருப்புப் பகுதியில் உள்ள கழிவுநீர் சாக்கடையில் தண்ணீர் குடிக்கவும், எலி பிடிக்கவும் வரும். இதுபோல நல்ல பாம்பு வந்தபோது மீன்பிடி வலையில் சிக்கி மயங்கிவிட்டது. தண்ணீர் கொடுத்தவுடன் அதற்குத் தெம்பு ஏற்பட்டு, ஆடத் தொடங்கியது'' என்று தெரிவித்தார்.
