

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளோர் வெளியில் பொது இடங்களில் நடமாடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா எச்சரித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நலவழித்துறை, வருவாய்த் துறை, காவல் துறை உள்ளிட்ட பலவேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப். 21) ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ் (வருவாய்), எஸ்.பாஸ்கரன் (பேரிடர் மேலாண்மை), நலவழித்துறை துணை இயக்குநர் கே.மோகன்ராஜ், மண்டலக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரகுநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் ஆட்சியர் அர்ஜூன் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், "நலவழித்துறை மற்றும் தொடர்புடைய துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கரோனா சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள், உபகரணங்கள் கையிருப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கரோனா இரண்டாவது அலை, முதல் அலையை விட தீவிரமாகப் பரவி வருகிறது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 80-லிருந்து 90 என்ற வகையில் மிகவும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சில கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார். நாள்தோறும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் இரவு 8 மணி வரை 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் 10 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் காலை 5 மணி வரை கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
காரைக்கால் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத நிலையில், நாள்தோறும் 600-லிருந்து 700 பேரிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. மக்கள் முகக்கவசம் அணிவதோடு கண்டிப்பாக தனிமனித இடவெளியைப் பின்பற்ற வேண்டும். கரோனா இரண்டாவது அலையை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். முதியோர், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் பேர் இதன் மூலம் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்ட தொடர்புடைய அனைத்துத் துறைகளுக்கும், ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்டத்தில் உள்ள 12 சுகாதார நிலையங்களிலும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலும் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். எனவே, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் போட்டுக் கொள்ள வேண்டும்.
கரோனா பரிசோதனை எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விநாயகா மிஷன்ஸ் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளை (ஏப். 22) முதல் மாவட்ட நிர்வாகத்துக்காக நாள் ஒன்றுக்கு 100 முதல் 120 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 6 சிறிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வீட்டுத் தனிமையில் இருக்கக்கூடிய கரோனா தொற்றாளர்களில் சிலர் விதிகளை மீறி வெளியில் பொது இடங்களில் நடமாடுவதாக சில புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து, கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல், வருவாய், நலவழித் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் மூலம் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்".
இவ்வாறு ஆட்சியர் அர்ஜுன் சர்மா தெரிவித்தார்.