

கரோனாவைக் கட்டுப்படுத்த புதுச்சேரியில் பாண்லே கடைகளில் ஒரு ரூபாய்க்கு முகக்கவசம், பத்து ரூபாய்க்கு கிருமிநாசினி இன்று முதல் குறைந்த விலையில் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஏழை மக்களுக்குப் பொருளாதாரச் சுமையைக் குறைக்க பாண்லே கடைகள் மூலமாக குறைந்த விலையில் முகக்கவசம், கிருமிநாசினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அரசின் பால் விற்பனையகங்களான பாண்லேயில் இவற்றை விற்கவுள்ளனர்.
ராஜ்நிவாஸில் துணைநிலை ஆளுநர் தமிழிசை இம்முறையை இன்று (ஏப்.21) தொடங்கி வைத்தார். முகக்கவசம், கிருமிநாசினி பாட்டில்களை பாண்லே மேலாண் இயக்குநர் சுதாகர் மற்றும் ஊழியர்கள் பெற்றுக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, ஆளுநர் தமிழிசை கூறுகையில், "முகக்கவசம் அணிவதால் 95 சதவீதத் தொற்று தடுக்கப்படுகிறது. ஏழை மக்களுக்காக ரூ.1க்கு முகக்கவசமும், 50 மி.லி. கொண்ட கிருமிநாசினி பாட்டில் ரூ.10க்கும் விற்கப்படும். அத்துடன் முகக்கவசம் இலவசமாகப் பல இடங்களில் தரவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.