புதுச்சேரி ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும்: ஆளுநருக்கு பாஜக கோரிக்கை

ஜெ.துரை சேனாதிபதி
ஜெ.துரை சேனாதிபதி
Updated on
1 min read

புதுச்சேரி மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என, காரைக்கால் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட பாஜக தலைவர் ஜெ.துரை சேனாதிபதி இன்று (ஏப். 21) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"காரைக்கால் மாவட்டம் பொருளாதார ரீதியாக நலிவுற்ற நிலையில் உள்ள சூழலில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ள ஊரடங்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அனைத்துத் தரப்பு மக்களும் அச்சப்படுகின்றனர்.

தமிழகத்தைப் போல ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊரடங்கு என்ற நிலையை மக்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் உள்ளனர். சனிக்கிழமையன்றும் ஊரடங்கு அறிவித்துள்ளது, தமிழகத்தையொட்டிய பகுதியாக காரைக்கால் இருப்பதால் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களையும், மக்கள் அவதிக்குள்ளாகும் நிலையையும் ஏற்படுத்தும்.

காரைக்கால் மாவட்டத்தில் ஏற்கெனவே வியாபாரம் முடங்கியுள்ள நிலையில், மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு, அன்றாடக் கூலித் தொழிலாளர்களையும், வியாபாரிகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து, துணைநிலை ஆளுநர் உரிய கவனம் செலுத்தி ஊரடங்கு அறிவிப்பில் சில தளர்வுகளை அளிக்க வேண்டும்.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இல்லாத நிலை, மருந்துகள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளை உடனடியாகக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா உயிரிழப்பு அதிகரித்துவிட்ட நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு நிவாரண உதவியாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என, காரைக்கால் மாவட்ட பாஜக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்".

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in