நதிகள், நீரோடைகளில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள்; அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

நதிகள், நீரோடைகளில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களைப் பெற்று விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், நரையூர் கிராமத்தில் ஓடும் பாசனக் கால்வாயில் அப்பகுதி குடியிருப்புவாசிகள், கழிவுநீரை வெளியேற்றுவதாகக் கூறி, ரமேஷ் மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றுவதால், விவசாயம் பாதிப்பதுடன், கழிவுகளால் கால்வாய் நீர் போக்குவரத்தும் தடைப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கழிவுநீரைக் கால்வாயில் வெளியேற்றக் கூடாது என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், நதி, கால்வாய்களில் கழிவுநீரை வெளியேற்றுவதால், நீர் மாசடைவதாகவும், இதைத் தடுக்க வேண்டியது முக்கியமானது எனக் கூறி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், இந்தப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, தேவைப்பட்டால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகம் முழுவதும் நதிகள் மற்றும் கால்வாய்களில் கழிவுநீரை வெளியேற்றுவதைத் தடுக்கவும், தேவைப்படும் இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கவும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்க, தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களைப் பெற்று விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்துக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in