Published : 21 Apr 2021 12:07 pm

Updated : 21 Apr 2021 12:07 pm

 

Published : 21 Apr 2021 12:07 PM
Last Updated : 21 Apr 2021 12:07 PM

கல்வித் துறையைக் காவிமயமாக்கும் மத்திய அரசின் சதிச் செயல்: வைகோ கண்டனம்

vaiko-condemns-bjp-government
வைகோ: கோப்புப்படம்

சென்னை

பாடத்திட்டங்களில் இந்துத்துவா சனாதனக் கருத்துகள் திணிக்கப்பட்டுள்ளதாக, மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (ஏப். 21) வெளியிட்ட அறிக்கை:


"கரோனா பெருந்தொற்று நாட்டைத் துயரப் படுகுழியில் தள்ளி இருக்கும் சூழலில், மத்திய பாஜக அரசு, கல்வித் துறையைக் காவிமயமாக்கும் சதிச் செயலை அரங்கேற்றி இருக்கிறது.

கடந்த 2020-21 கல்வி ஆண்டில் கரோனா பாதிப்பில் பள்ளிகள் மூடப்பட்டன. இணையம் மூலம் வகுப்புகள் நடப்பதைக் காரணம் காட்டி, மாணவர்களின் பாடச் சுமையைக் குறைப்பதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தது. சிபிஎஸ்இ 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களில் 30 விழுக்காடு பாடங்கள் குறைக்கப்பட்டன.

இதில், 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடங்களிலிருந்து கூட்டாட்சி, குடியுரிமை, தேசியவாதம் மற்றும மதச்சார்பின்மை போன்ற அத்தியாயங்கள் முற்றிலும் நீக்கப்பட்டன. இந்திய ஜனநாயகம், சமூக அமைப்பு மற்றும் சமூகச் செயல் முறைகள் பற்றிய அத்தியாயங்கள் சமூகவியல் பாடத்திலிருந்து நீக்கப்பட்டன.

இவ்வாறு பாடங்கள் நீக்கப்பட்டதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் சங் பரிவாரங்களின் சிந்தனைப் போக்கு இருப்பது அப்பட்டமாக வெளிப்பட்டது. தற்போது மீண்டும் அதே பின்னணியில் பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல் அளித்து பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இளங்கலை வரலாறு படிப்புக்கான பாடத்திட்டங்கள் வரைவு செய்யப்பட்டுள்ளன. இதில், ஆர்எஸ்எஸ் இந்துத்துவா கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள் போன்றவற்றைச் சேர்த்து இருக்கின்றனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் இளங்கலை வரலாற்றின் பழைய பாடத்திட்டத்தின் முதல் பாகம், இந்தியாவின் தொடக்கக் கால வரலாற்றைப் பேசுகிறது. ஆனால், தற்போது புதிய பாடத்திட்டத்தின் முதல் பாகம், 'பாரத்வர்ஷாவின் கருத்துருவாக்கம் (Concept of Bharatvarsha)' என்ற பாடம் முதல் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. 'பாரதத்தின் நித்தியம்' எனும் தலைப்பில் வேதங்கள், வேதாந்தங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள் போன்ற வைதீக பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஆரம்பக் காலத்திலிருந்து கி.மு. 550 வரை என்ற மூன்றாவது தாளில், 'சிந்து - சரஸ்வதி நாகரிகம் மற்றும் அதன் தொடர்ச்சி, எழுச்சி மற்றும் வீழ்ச்சி' பாடமாக இடம்பெற்று இருக்கின்றது. 'சரஸ்வதி' என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் ஆறு; இதற்கு வரலாறோ, தொல்லியல் ஆதாரமோ கிடையாது.

புராண கால சரஸ்வதி நதியை உண்மை வரலாறாக ஆர்எஸ்எஸ் சனாதன அமைப்புகள் சித்தரித்து வருவதைப் பாடத்திட்டத்திலும் புகுத்திவிட்டனர். 'இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம்' என்ற 12ஆவது தாளில், 'ராமாயணம் மற்றும் மகாபாரதம்' போன்றவை தனித் தனி தலைப்புகளின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

'இடைக்கால இந்தியா' பற்றி தற்போதுள்ள பாடத்திட்டத்தில் 13ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாறு குறித்து மூன்று தாள்கள் உள்ளன. அந்தக் காலகட்டம் குறித்து மூன்று பருவங்களுக்கு மேல் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், புதிய பாடத்திட்டத்தில் முஸ்லிம்கள் கால ஆட்சியின் முக்கியத்துவத்தைக் குறைத்து ஒரே ஒரு தாள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பாடத்திட்டத்தில் இடம்பெறாத ஒன்றை முஸ்லிம் மன்னர்கள் பற்றிய பாடங்களில் 'படையெடுப்பு' என்ற சொல் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுவரை 'இந்திய சமூகம்' என்று பொதுத் தலைப்பில் இடம் பெற்றிருந்த பாடத்தை மாற்றி, ஏழாவது தாளில், இந்து சமூகம், முஸ்லிம் சமூகம் என்று பிரித்து, அவற்றில் இந்து சமூகத்தின் சாதி மற்றும் தொழில் குழுக்கள், வாழ்க்கை முறை, கல்வி, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் என்று பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, முஸ்லிம் சமூகத்தின் பிரிவுகள் மற்றும் தொழில் குழுக்கள், வாழ்க்கை முறை, கல்வி, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் தொடர்பான பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

'நவீன இந்தியா' குறித்த பாடத்தில், தற்போது 1857 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் தலித் அரசியல் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவை புதிய பாடத்தில் நீக்கப்பட்டுள்ளன. 1857 சிப்பாய் கிளர்ச்சியை, முதல் சுதந்திரப் போர் என்று இந்துமகா சபை தலைவர் வி.டி.சாவர்க்கர் வர்ணித்ததை அப்படியே பாடத்தில் சேர்த்துள்ளனர். அதற்கு முன் வங்காளத்தில் நடந்த சன்யாசி கிளர்ச்சி, ஒடியாவில் பைக்கா கிளர்ச்சி, தமிழ்நாட்டில் வேலூர் புரட்சி போன்றவை இடம்பெறவில்லை.

1905 வங்கப் பிரிவினை மற்றும் அதற்கு எதிரான குறிப்புகள் பாடத் திட்டத்தில் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளது. காந்தி, நேரு, அம்பேத்கர் போன்ற வரலாற்றில் வாழும் மாபெரும் தலைவர்களின் முக்கியத்துவத்தைப் பாடத்திட்டத்தில் இருட்டடிப்பு செய்துள்ளனர்.

இந்துத்துவ சனாதனக் கோட்பாட்டுக்கு ஏற்ற வகையில் இளங்கலை வரலாறு பட்டப் படிப்புக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. கல்வித் துறையில் காவி சித்தாந்தத்திற்குப் பாதை அமைக்கும் பாசிசப் போக்கு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!


வைகோமத்திய அரசுபாஜகமதிமுககல்வித்துறைVaikoCentral governmentBJPMDMKEducation departmentONE MINUTE NEWS

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x