Published : 21 Apr 2021 11:55 AM
Last Updated : 21 Apr 2021 11:55 AM

மசினகுடியில் இறைச்சியில் விஷம் வைத்து புலியைக் கொலை செய்த கொடூரம்: இருவர் கைது

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இறைச்சியில் விஷம் கலந்து கொடுத்துப் புலியைக் கொலை செய்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிங்காரா வனக் கோட்டத்தில் சீமார்குழி ஓடைப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது, புலியின் சடலத்தைப் பார்த்துள்ளனர். சுமார் 7 வயதான இந்தப் பெண் புலியின் நகங்கள் மற்றும் பற்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன.

பெண் புலி விஷம் வைத்துக் கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், இறந்த புலி அருகில் இருந்த அதன் 2 குட்டிகளை வனத்துறையினர் மீட்டு, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பினர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், மசினகுடி ஆச்சக்கரையைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளியான அகமது கபீர் (26), அதே பகுதியைச் சேர்ந்த கரியன் என்பவரை வனத்துறையினர் நேற்று (ஏப்.20) இரவு கைது செய்தனர்.

விசாரணையில், மேய்ச்சலின்போது கால்நடைகளைப் புலி கொன்றுவிடும் என்ற அச்சத்தில், இறைச்சியில் விஷம் கலந்துவைத்துக் கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள மசினகுடி ஆச்சக்கரையைச் சேர்ந்த சதாம் (29) மற்றும் செளகத் அலி (55) ஆகியோரை வனத்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

கைதான அகமது சபீர் மற்றும் கரியன் ஆகியோர் கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x