

மலையாளத்தின் மூத்த இலக்கிய வாதி பால் சக்கரியா எழுதிய ‘இதான் எண்ட்டே பேரு’ என்னும்மலையாள குறுநாவல் கோட்ஸேவின் மன ஆழத்தைத் துழாவ முயல்கிறது. 1948 ஜனவரி 30 மாலை 5.17-க்கு காந்தியை சுட்டுக் கொன்றபின் காவலர்களால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும்போது கோட்ஸேவின் மனதில் எழும் எண்ணங்களைப் பதிவு செய்கிறது இந்நூல்.
அந்த எண்ணங்களுக்கிடையே கோட்ஸேவுக்கு தன்னுடைய முந்தைய பிறவிகள் குறித்த கற்பனைகளும் வந்து செல்கின்றன. 2001-ல் வெளியான இந்தக் குறுநாவலை தமிழில் ’இதுதான் என் பெயர்’ என்னும் தலைப்பில் கவிஞர் சுகுமாரன்மொழிபெயர்த்துள்ளார். இதை‘திஸ் இஸ் மை நேம்’ (This is My Name) என்னும் ஆங்கில நாடகமாகஇயக்கியிருக்கிறார் ப்ரஸன்னா ராமஸ்வாமி. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர் ஏ.ஜே.தாமஸ்.இந்த நாடகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் ஃப்ரான்சேஸ் அரங்கத்தில் அரங் கேறியது.
பெருமளவில் ஒற்றைக் கதாபாத்திரத்தின் எண்ணங்களாலும் கற்பனைகளாலும் நிரம்பிய இந்தக் குறுநாவலை அதன் சாரம் குறையாமல் காட்சிப்படுத்துவது மிகப் பெரும் சவால். அரங்க நாடகம் என்னும் கலை வடிவத்தின் சாத்தியங்களை முழுமையாக உள்வாங்கிய அனுபவத்தோடும், புதுமைகளைப் புகுத்துவதற்கான கற்பனைவளத்தோடும் அந்தச் சவாலில் வென்றிருக்கிறார் ப்ரஸன்னா ராமஸ்வாமி.
காந்தி முன்வைத்த இந்து மதத்துக்கும், கோட்ஸே முன்வைத்த இந்து மதத்துக்கும் இடையிலான வேறுபாட்டை காந்தியை கொன்ற பிறகு கோட்ஸே வெளிப்படுத்தும் எண்ணங்களின் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரம் கோட்ஸேவின் மதம், தேசியம் குறித்த கற்பிதங்கள், அவற்றால் விளைந்த பெருமிதம், தனது ‘தர்மம்’ காக்க கொலையும் செய்யலாம் என்னும் வன்முறை மனநிலை,பெண்கள், மாற்று மதத்தவர் மீதான மிதமிஞ்சிய வெறுப்புணர்வு ஆகியவற்றை பிரதிபலிப்பதாகவும் அவை அமைந்துள்ளன.
கோட்ஸேவின் முந்தைய பிறவிகள் குறித்த கற்பனைகளில் வரலாற்றில் வெவ்வேறு மதங்களின் பெயரால் பல கொடுமைகளை நிகழ்த்திய கொடுங்கோலர்களின் தொடர்ச்சியாக கோட்ஸே பாத்திரம் உருவகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் காந்தியின் கொலையும் அதை நிகழ்த்திய கோட்ஸேவின் சிந்தனையும் வரலாற்றின் தனித்த நிகழ்வுகளல்ல; மனிதகுல வரலாற்றில் மதவாதம், சாதியம், அதிகாரவெறி, தன்முனைப்பு, ஆண்மையசிந்தனை ஆகியவற்றின் தொடர்ச்சியான வெளிப்பாடுகளில் ஒன்றுதான் என்றும் உணர்த்தப்படுகிறது.
மதம், இந்தியப் பண்பாடு ஆகியவற்றில் கோட்ஸேவின் பார்வை சமகாலத்திலும் தாக்கம் செலுத்துவதை உணர்த்தும் வகையில் மூலப்பிரதியில் இல்லாத இரண்டு காட்சிகள் நாடகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் பரதநாட்டியக் கலைஞர் அனிதா ரத்னம் தோன்றும் காட்சி, புராணப் பெண்களை தமதுநம்பிக்கைக்கேற்ப ‘தூய்மை’ப்படுத்தும் பார்வையை கேள்விக்குட்படுத்துகிறது.
இன்னொரு காட்சியில் காந்திமுழுமையாக மனனம் செய்திருந்தஅவரால் பெரிதும் கொண்டாடப்பட்ட பகவத் கீதையின் சுலோகங்கள், ஆன்மிக சொற்பொழிவுகளில்கருத்தியல் திரிப்புக்குள்ளாக்கப்பட்டு வன்முறையைத் தூண்ட பயன்படுத்தப்படுவதாகக் காட்டுகிறது. இவ்விரு இடையீடுகளும் நாவலின் சமகாலப் பொருத்தப்பாட்டைப் புரிந்துகொள்ள முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால் இவை தேவைக்கதிகமாக நீள்வது போன்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.
கோட்ஸேவின் சித்தாந்தப் பற்றுதல், அதற்காக தியாகம் செய்திருப்பது போன்ற பெருமிதம், அதைமற்றவர்கள் புரிந்துகொள்ளாதஏக்கம் என அனைத்தையும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் சர்வேஷ் தர். மற்றபிரதான நடிகர்களான நிகில் கேடியா, தர்ஷன் ராம்குமார் இருவரும் கோட்ஸேவின் எண்ணங்களையும், முற்பிறவிகள் குறித்த கற்பனைகளையும் நிகழ்த்திக் காட்டுவதில் உயிர்ப்பு மிக்க நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.
கதைசொல்லியாக வரும் நிகிலாகேசவன் கதையின் முக்கியமான பகுதிகளை வாசித்த விதம், அவற்றின் ஆழத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவதாக அமைந்திருந்தது. அனிதா ரத்னத்தின் நடனம்சரண்யாவின் பாடல், ஆனந்த்குமாரின் இசை, சார்லஸின் ஒலிஅமைப்பு, குருநாதன் கோவிந்தனின் அரங்க வடிவமைப்பு அனைத்தும் காட்சி அனுபவத்துக்கு வளம்சேர்ப்பதாகவும், நாடகம் ஏற்படுத்தும் தாக்கத்துக்கு வலுவூட்டுவதாகவும் அமைந்துள்ளன.
சக்காரியாவின. இந்தக் குறுநாவலும் அதன் தற்போதைய நாடக வடிவமும் சமகால அரசியல் சூழல்சார்ந்த பொருத்தப்பாட்டை தாண்டி மதம், ஆன்மிகம் ஆகியவற்றின் தவறான பிரயோகங்களால் விளையக் கூடிய தீமைகளைப் புரிய வைப்பதாலும் முக்கியத்துவம் பெறுகின்றன.