இரவு நேர ஊரடங்கு உத்தரவு காரணமாக அரசுப் பேருந்துகள் கடைசியாக புறப்படும் நேரம் அறிவிப்பு

இரவு நேர ஊரடங்கு உத்தரவு காரணமாக அரசுப் பேருந்துகள் கடைசியாக புறப்படும் நேரம் அறிவிப்பு
Updated on
2 min read

இரவு நேர ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கடைசியாக புறப்பட்டுச் செல்லும் அரசுப் பேருந்துகளின் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு உத்தரவுப்படி மறு உத்தரவு வரும் வரை தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. எனவே, கோவை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக காந்திபுரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் பேருந்துகள் இயங்காது.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பேருந்து நிலையங்களில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதல்களின்படி பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி, பின்வாசல் வழியாக ஏறி முன்வாசல் வழியாக இறங்க வேண்டும்.

கோவையில் மொத்தம் 640 நகர பேருந்துகள் இயங்கி வருகின்றன. அந்த எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. இரவில் காந்திபுரம்-சிங்காநல்லூர் இடையே இயக்கப்பட்டு வந்த 5 பேருந்துகள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளன. கோவையில் இருந்து இயக்கப்படும் 337 புறநகர் பேருந்துகளில் 249 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னைக்கு கடைசி பேருந்து

தொலைதூரம் இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகள் செல்ல வேண்டிய இடங்களுக்கு இரவு 10 மணிக்கு முன்பாக சென்றடைய வேண்டும் என்பதால் அந்த நேரத்தைக் கணக்கிட்டு, காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோவையிலிருந்து கடைசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு காலை 8 மணி, திருப்பதிக்கு காலை 8.30 மணி, சென்னைக்கு காலை 10.30 மணி, பெங்களூருவுக்கு நண்பகல் 12 மணிக்கு கடைசி பேருந்து புறப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக (எஸ்இடிசி) அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியார் நகர, ஆம்னி பேருந்துகள்

கோவை மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வி.துரைக்கண்ணன் கூறும்போது, “கோவையில் இயக்கப்படும் தனியார் நகர பேருந்துகளில் வார நாட்களில் அலுவலக நேரத்தில் (பீக் ஹவர்) மட்டும் காலை, மாலை பயணிகள் கூட்டம் உள்ளது. வார இறுதி நாட்களில் இருக்கைகள் நிரம்புவது இல்லை. எனவே, இனிமேல் சனிக்கிழமைகளில் பெரும்பாலான தனியார் நகர பேருந்துகள் இயங்காது" என்றார்.

பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் இரவு நேரத்தில்தான் இயக்கப்படுகின்றன. சுமார் 10 சதவீத பேருந்துகள் மட்டுமே பகலில் இயங்குகின்றன. அதிலும், நேற்று போதிய முன்பதிவு இல்லாததால் பல ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதாக கோயம்புத்தூர் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், முகவர்கள் சங்கத்தின் செயலாளர் என்.செந்தில்குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in