Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

ஊரடங்கை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

ஊரடங்கை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

சென்னை பெருநகரில் காணாமல் மற்றும் திருட்டு போன ரூ.1.55 கோடி மதிப்புள்ள 1,382 செல்போன்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. இந்த செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

மீட்கப்பட்ட செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்வாக 30 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர்கள் கண்ணன், செந்தில்குமார், துணை ஆணையர்கள் விமலா, தர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறியதாவது:

கரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கை அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் கரோனா தொற்றிலிருந்து விடுபட முடியும். இயல்பு வாழ்க்கைக்கும் திரும்ப முடியும்.

ஊரடங்கு உத்தரவுகளை மீறுவோர் மற்றும் வாகனங்களை இயக்குவோர் மீது சட்ட ரீதியாக வழக்கு பதிவு செய்யப்படும். வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். திருமண விழாக்களில் அதிகபட்சமாக 100 பேரும், இறுதி ஊர்வலத்தில் 50 பேரும் பங்கேற்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதை மீறுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். திருமணங்களுக்கு செல்வோர் அவசியம் பத்திரிகைகளை வைத்திருக்க வேண்டும்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில், இரவு 10 மணிக்குமேல் பொது இடங்களில் இருப்போரிடம் விசாரணை நடத்தி, அவர்கள் உரிய இடத்துக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் இரவு நேர ஊரடங்கு பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 200 இடங்களில் வாகன சோதனை நடக்கிறது.

மேம்பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் அணுகு சாலைகளில் செல்ல அறிவுறுத்தப்படும். பொதுமக்கள் அனைவரும் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x