Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கவனக்குறைவாக இருக்கக் கூடாது: திருத்தணியில் ஆய்வு செய்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்

திருத்தணி

திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 45 வயதை கடந்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும்பணியை நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்நேற்று பிற்பகலில் திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். திருப்பதிக்குச் செல்லும் வழியில், திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 45 வயதை கடந்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை ஆளுநர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும்சிகிச்சைகள், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் ஆளுநர் கலந்துரையாடிய போது, ’’நீங்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்டது பாராட்டுக்குரியது. நானும் 2 தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளேன். எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் நான் நலமாக உள்ளேன்.

எனவே, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உறவினர்கள், நண்பர்கள என அனைவருக்கும் இதன் அவசியத்தை வலியுறுத்தி, அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், தடுப்பூசி போட்டுக் கொண்டோமே என கவனக் குறைவாக இருக்கக் கூடாது. மாறாக, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஆளுநர் பேசும்போது, "தமிழகத்தில் போதிய அளவு கரோனா தடுப்பூசி இருப்பு உள்ளது.ஆக்சிஜன் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களும் இருப்பில் உள்ளன. ஊடகவியலாளர்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், வரும் மே 1-க்குப் பிறகு 18 வயதை நிரம்பிய அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசியை போட்டுக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, சுகாதாரப் பணிகளுக்கான துணைஇயக்குநர் ஜவஹர்லால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x