

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்த மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 131-வது ஆண்டு தொடக்க விழா, மாநில தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தி, காமராஜர், ராஜீவ் காந்தி உள்ளிட்ட மறைந்த தலைவர்களின் உருவப் படங்களுக்கு இளங்கோவன், கட்சியின் தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர், செய்தித் தொடர்பாளர் குஷ்பு, மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, பொருளாளர் நாசே ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்து சேவாதள தொண்டர்களின் அணிவகுப்பை இளங்கோவன் ஏற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறும்போது, ''இந்தியாவில் ஜனநாயகம் நிலைத்திருப்பதற்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிமைகள் கிடைத்திருப்பதற்கும் காங்கிரஸ் கட்சியே காரணம். இடையிடையே சில தேர்தல்களில் தோற்றாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ் தலைவர்கள் மக்களுக்காக உழைத்து வருகின்றனர். சமூக, பொருளாதாரத்தில் நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு காங்கிரஸ் ஆட்சியே காரணம்.
தமிழக மக்கள் மீண்டும் காங்கிரஸை ஆதரிக்க தொடங்கியுள்ளனர். கடந்த 4 மாதங்களாக வாக்குச்சாவடி அளவில் குழுக்களை அமைப்பது, முகவர்களை நியமிப்பது என தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளோம்.
அதிமுக அரசின் செயலற்ற நிர்வாகத்தால் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்தங்கியுள்ளது. தமிழக அரசின் நிர்வாகம் முடங்கியதால் சமீபத்தில் பெய்த பெருமழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அரசை தோற்கடிக்க மதசார்பற்ற சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் முடிவு செய்வார்கள். தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை யாருடனும் பேச்சு நடத்தவில்லை'' என்று இளங்கோவன் கூறினார்.