மேட்டூர் அணை மூடப்பட்டுள்ள நிலையில் கல்லணையில் ரூ.122.60 கோடியில் புனரமைப்பு பணிகள் தீவிரம்

மேட்டூர் அணை மூடப்பட்டுள்ள நிலையில் கல்லணையில் ரூ.122.60 கோடியில் புனரமைப்பு பணிகள் தீவிரம்
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.122.60 கோடி செலவில் அணையை பலப்படுத்தும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மேட்டூர் அணை மூடப்பட்டுள்ளதால் இந்த நேரத்தை பயன்படுத்தி, நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.122.60 கோடி மதிப்பீட்டில் கல்லணையில் பல்வேறு புனரமைப்பு மற்றும் அணையை பலப்படுத்தும் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், கல்லணையில் உள்ள காவிரி ஆற்றின் மதகுகளை சீரமைத்தல், தூண்களின் மீது கம்ப்ரஷர் உதவியோடு கலவைப் பூச்சு செய்து பலப்படுத்துதல், மண் அரிப்பை தடுக்கும் வகையில் தரைத்தளத்தில் கான்கிரீட் தளம் அமைத்தல், அணைக்கு அருகே கரை அரிப்பை தடுக்கும் வகையில் காவிரியில் இருபுறமும் கரைப்பகுதியில் கான்கிரீட் சாய்தளம்(ரிவிட்மென்ட்) அமைத்தல், ஷட்டர்களை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், கல்லணைக்கு வரும் தண்ணீரின் வேகத்தை குறைக்கும் வகையில் அணைக்கு முன்பாக உள்ள தடுப்புச்சுவர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

கல்லணையில் காவிரி மற்றும் வெண்ணாற்றில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்கும் வகையில் படித்துறை சீரமைக்கப்பட்டு, தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட உள்ளன.

பூண்டி அருகே காவிரி ஆற்றில் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் சிறிய படுக்கை அணை கட்டப்படுகிறது.

மேலும், திருக்காட்டுப்பள்ளியில் உள்ள காவிரி மற்றும் குடமுருட்டி ஆற்றின் மதகுகள், பாலம் ஆகியவையும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர, கல்லணையிலிருந்து பிரியும் சிறிய ஆறுகள், வாய்க் கால்கள் மற்றும் வடிகால்களில் பழுதடைந்த நீரொழுங்கிகள், மதகுகள் சீரமைக்கப்படவுள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in