

புதுச்சேரி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். வரும் திங்கள்கிழமை முதல் பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் உயர்நிலைக்கூட்டம் இன்று இரவு ராஜ்நிவாஸில் நடந்தது. கூட்டத்தில் உயர் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு விவரம்:
புதுச்சேரி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இது வரும் வெள்ளி முதல் அமலாகும். இதர நாட்களில் கடைகள், அங்காடிகள் பகல் 2 வரை மட்டுமே இயங்கும். இது வரும் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் பகல் 2 மணிக்குப் பிறகு உணவு விடுதிகளில் உணவு எடுத்துச் செல்ல மட்டும் அனுமதிக்கப்படும்.
வழிபாட்டுத் தலங்களில் ஊர்வலம், தேரோட்டம் முதலியவை தடை செய்யப்படுகிறது. கரோனா வழிமுறைகளோடு வழிபாடு அனுமதிக்கப்படும்.
பாண்லே பால் பூத்களில் நாளை முதல் குறைந்த விலையில் முகக்கவசம், கிருமிநாசினி வழங்கப்படும்.
மருத்துவமனைகள், பிற மருத்துவப்பணிகளுக்கு தேவையான ஆட்கள் நியமனம் செய்யப்படுவார்கள். கபசுர குடிநீர் வழங்குவது உட்பட இந்திய மருத்துவ வழிமுறைகள் ஊக்கப்படுத்தப்படும். ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்துவோம். கரோனா தொற்றாளர்களை அழைத்துச் செல்ல தனியார் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும்.
கரோனா அறிகுறி ஏற்பட்டால் மருத்துவமனையிலோ, கரோனா பாதுகாப்பு மையங்களிலோ சேர்க்க வேண்டும். ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்படும்.
பரிசோதனை முடிவுகள் விரைவுப்படுத்தப்படும். மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இணைப்பை முறைப்படுத்தி போதிய இருப்பு உறுதி செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது..