

திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருக்கின்றன. பேருந்துகள், ரயில்களில் கூட்டம் இருக்கவில்லை.
கரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கும் அமலுக்கு வந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைப்பகுதிகள், உவரி கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள், வ.உ.சி. மணிமண்டபம், ஒண்டிவீரன் மணிமண்டபம் உள்ளிட்ட நினைவிடங்களுக்கு பொதுமக்கள் செல்லவும், தாமிரபரணி ஆற்றில் கூட்டமாகச் சென்று குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியிலிருந்து இரவு 7 மணிக்குமேல் தொலைதூர இடங்களுக்கான பேருந்து சேவை இருக்கவில்லை. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய நகரங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இரவு 8 மணியுடன் நிறுத்தப்பட்டது. நகர பகுதிகளில் இரவு 9.30 மணிவரை பேருந்து சேவை இருந்தது.
திருநெல்வேலியிலிருந்து காலை 10 மணிக்குமேல் சென்னை, கோவை, சேலத்துக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. திருநெல்வேலியிலிருந்து சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட தொலைதூரங்களுக்கு இயக்கப்பட்ட அரசு விரைவுப் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் இருக்கவில்லை.
இதுபோல் திருநெல்வேலியிலிருந்து வெளிமாவட்ட, வெளிமாநிலங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களிலும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. சென்னை போன்ற பிறபகுதிகளில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த ரயில்களிலும் சில பயணிகளே வந்திறங்கினர்.
இரவு நேர ஊரடங்கு அமலுக்குவந்துள்ள நிலையில் கூடுதல் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். அனைத்து போலீஸ் நிலைய எல்லை பகுதிகளிலும் இரு இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
முக்கிய சாலைகளில் கூடுதல் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. இரவு நேர பணிக்கு செல்வோர் உரிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அடையாள அட்டையை வைத்திருப்போர் மட்டுமே இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுவர்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 6 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு செய்யப்படுகிறது. விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாமல் இரவு நேரங்களில் சுற்றித்திரிபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின்போதும் பகல் நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை 50 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.