Published : 20 Apr 2021 07:48 PM
Last Updated : 20 Apr 2021 07:48 PM

வரதட்சணைக் கொடுமை வழக்குகளிலிருந்து பெற்றோர் தப்பிக்க முடியாது; பொறுப்புள்ள குடிமகனாக மகனை வளர்ப்பதே கடமை: உயர் நீதிமன்றம்

சென்னை

தனியாக வசிப்பதாகக் கூறி வரதட்சணைக் கொடுமை வழக்குகளில் இருந்து பெற்றோர் தப்பித்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், குழந்தையைப் பொறுப்புள்ள குடிமகனாக வளர்ப்பது பெற்றோரின் முக்கியக் கடமை என்று அறிவுறுத்தியுள்ளது.

வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கடலூர் மகளிர் நீதிமன்றம், கணவன் மற்றும் கணவனின் பெற்றோருக்குத் தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பெற்றோர், தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீன் வழங்கக் கோரியிருந்தனர். அவர்களது மேல்முறையீட்டு மனுவில், மகனுக்குத் திருமணமான நாளிலிருந்து தாங்கள் தனியாகத்தான் வசித்து வருவதாகவும், மருமகளின் தற்கொலைக்குத் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தனர்.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “மகனுடன் சேர்ந்து மனுதாரர்களும் மருமகளைத் துன்புறுத்தியதற்கு ஆதாரம் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி வேல்முருகன், வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தார். ஒருபுறம் மகனுடன் வசிக்கவில்லை என்று கூறித் தப்பிக்கும் பெற்றோர், மகனுடன் சேர்ந்துகொண்டு வரதட்சணை மற்றும் பணம் நகைகளைப் பெறுகின்றனர். மகன் மற்றும் பாதிக்கப்பட்டவருடன் வசிக்கவில்லை என்று கூறி, பெற்றோர்கள் தப்பித்துக் கொள்வது இந்தச் சமூகத்திற்கு தவறான தகவலைக் கொண்டு செல்கின்றனர் என நீதிபதி சுட்டிக்காட்டினார்.

ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது, இருப்பிடம் தருவது, வளர்ப்பது, நல்ல கல்வியை வழங்குவது, நல்ல வேலையைப் பெற தங்கள் குழந்தையை ஊக்குவிப்பது மட்டுமல்ல, பொறுப்புள்ள குடிமகனாக வளர்க்க வேண்டியதும் பெற்றோரின் கடமை எனக் கூறிய நீதிபதி, தண்டனையை நிறுத்திவைக்க மறுத்துவிட்டார்.

பிரதான மேல்முறையீட்டு வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x