Last Updated : 20 Apr, 2021 07:43 PM

 

Published : 20 Apr 2021 07:43 PM
Last Updated : 20 Apr 2021 07:43 PM

கரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் ரூ.500 அபராதம்: புதுச்சேரி சுகாதாரத் துறை எச்சரிக்கை

கரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அருண் இன்று (ஏப். 20) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘புதுச்சேரியில் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் கரோனா பரவல் 20 மடங்கு அதிகரித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி வருகிறோம். இதற்காக 8 நாட்கள் 100 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரோனா தடுப்பூசி திருவிழாவில் 62 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 1.72 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசியால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பொதுமக்களுக்குத் தேவையான கரோனா தடுப்பூசி இருப்பில் உள்ளது. மற்ற மாநிலங்களில் தடுப்பூசிக்காகப் பலர் மாதக் கணக்கில் காத்திருக்கும் வேளையில், புதுச்சேரியில் எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கரோனா தடுப்பூசி திருவிழா முடிந்துவிட்டது எனக் கவலை கொள்ளாமல், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும் அணுகி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அதிக அளவில் மக்கள் தடுப்பூசி செலுத்தத் தயாராக இருக்கும்பட்சத்தில் அங்கு நடமாடும் தடுப்பூசி வாகனமும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

முதல் தவணை தடுப்பூசி எங்கே போட்டிருந்தாலும், 2-வது தவணை தடுப்பூசியினை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செலுத்திக் கொள்ளலாம். புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகளில் 1,398 கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளும், 625 ஆக்சிஜன் படுக்கைகளும், 28 வென்டிலேட்டர் படுக்கைகளும் காலியாக உள்ளன.

இதுமட்டுமின்றி தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் கணிசமான படுக்கைகள் காலியாக உள்ளன. அத்தியாவசியமான கரோனா நோயாளிகளுக்கு மட்டுமே படுக்கை வசதிகள் அளிக்கப்படும். சாதாரண அறிகுறியுடையோர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

அப்படி தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியே சுற்றித் திரிவது கண்டறியப்பட்டால், காவல், சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய துறையினர் கண்டறிந்து ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அடுத்தகட்டமாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதோடு, அவர்களைப் பிடித்து கோவிட் கேர் சென்டருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், மருத்துவமனைகளில் உள்ள கரோனா நோயாளிகளைக் கண்காணிக்க 500 அங்கன்வாடி ஊழியர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் மட்டுமின்றி சுகாதாரத் துறை ஊழியர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கரோனா தொற்று கண்டவர்கள் மிகவும் காலதாமதமாக மருத்துவமனையை அணுகுவதே இறப்பு அதிகரிப்புக்குக் காரணம். எனவே, பொதுமக்கள் கரோனா அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவமனையை அணுக வேண்டும்.’’

இவ்வாறு அருண் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x