

திரைப்பட நடிகர் விவேக் மறைவையொட்டி நாட்றாம்பள்ளியில் ஆண்டுதோறும் சுமார் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவது என முடிவு செய்திருப்பதாக, 'பசுமை பாதுகாப்பு' அமைப்பினர் தெரிவித்தனர்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக் இரு தினங்களுக்கு முன் மாரடைப்பால் காலமானார். நடிகர் விவேக் உயிருடன் இருந்தபோது தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில் மரக்கன்றுகளை நட்டு, பசுமையான தமிழகத்தை உருவாக்க மாணவர்கள், இளைஞர்களிடம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், அவரது மறைவு தமிழக மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் விவேக் மறைவையொட்டி திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அடுத்த சுண்ணாம்புகுட்டை பகுதியில் செயல்பட்டு வரும் 'பசுமை பாதுகாப்பு' அமைப்பு சார்பில் நாட்றாம்பள்ளி சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று (ஏப். 20) நடைபெற்றது.
'பசுமை பாதுகாப்பு' அமைப்பின் நிர்வாகி மோகன்ராஜ் தலைமையில், 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் எனப் பலர் ஒன்றிணைந்து சுண்ணாம்புகுட்டை பகுதியில் சாலையோரம் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 100 மரக்கன்றுகளை நட்டனர்.
இதுகுறித்து, 'பசுமை பாதுகாப்பு அமைப்பினர்' கூறும்போது, "நடிகர் விவேக் 1 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டிருந்தார். ஆனால், 30 லட்சம் மரக்கன்றுகளைக் கடந்தபோது மரணம் அவரை ஆட்கொண்டது. இது அவருடன் இணைந்து பயணித்த பல்வேறு பசுமை இயங்கங்களுக்குப் பேரதிர்ச்சியை உண்டாக்கியது.
எனினும், அவரது கனவு திட்டமான 1 கோடி மரக்கன்றுகளை நட்டு அதை முறையாகப் பராமரிப்பது என, நாட்றாம்பள்ளி 'பசுமை பாதுகாப்பு இயக்கம்' சார்பில் நாங்கள் முடிவு செய்து, முதல் கட்டமாக இன்று 100 மரக்கன்றுகளை சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு நட்டுள்ளோம். இந்த ஆண்டு முடியும் வரை மேலும் பல மரக்கன்றுகளை இப்பகுதியில் நாங்கள் நட உள்ளோம்.
இனி ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரம் மரக்கன்றுகளை 'பசுமை பாதுகாப்பு அமைப்பு' சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நட உள்ளோம். இதன் மூலம் திருப்பத்தூர் மவட்டத்தைப் பசுமையாக்க முயற்சி செய்வோம். மறைந்த நடிகர் விவேக்கின் கனவு இதன் மூலம் நனவாகும் என நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தனர்.