

ஆம்பூர் பகுதியில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட விளைபொருட்களை ஒற்றை யானை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் யானையை விரட்ட, அவரவர் நிலங்களில் காவலுக்கு நிற்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பைரப்பள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஆம்பூர் அடுத்த பொன்னப்பல்லி, பாலூர், கொத்தூர், சாரங்கல், ஓணாங்குட்டை, மாச்சம்பட்டு, ரெட்டிக்கிணறு ஆகிய கிராமங்களை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது.
ஒற்றை யானையால் 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட விளைபொருட்கள் சேதமடைந்துள்ளதால் யானையை விரட்ட வனச்சரகர் மூர்த்தி தலைமையிலான வனத்துறையினர், ராலகொத்தூர், பொன்னப்பல்லி, பைரப்பள்ளி கிராமங்களில் முகாமிட்டு யானையைக் கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறையினர் மற்றும் விவசாயிகளின் கண்களில் மண்ணைத் தூவி ஒற்றை யானை, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதிகளில் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். இந்நிலையில், ஆம்பூர் அடுத்த பாலூர் கிராமத்துக்குள் இன்று அதிகாலை நுழைந்த யானை, விவசாயி துளசிராமன் என்பவருக்குச் சொந்தமான வாழை தோட்டத்துக்குள் நுழைந்து அங்கிருந்த வாழை மரங்களை வேரோடு பிடுங்கி வீசியது.
பிறகு, அருகேயிருந்த விவசாயி ஜனார்த்தனன் என்பவரது நிலத்துக்குச் சென்றது. அங்கு யானைகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க ஜனார்த்தனன் நிலத்தைச் சுற்றி தடுப்புக் கம்பிகள் அமைத்திருந்தார். இதைப் பிடுங்கி வீசிய ஒற்றை யானை, அந்த நிலத்துக்குள் நுழைந்து அங்கு பயிரிடப்பட்ட விளைபொருட்களைச் சேதப்படுத்தியது. யானை பிளிறும் சத்தம் கேட்டு, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்தனர். பிறகு பட்டாசு வெடித்து, மேள, தாளம் வாசித்து யானை விரட்டி அடிக்கப்பட்டது.
பகல் நேரங்களில் யானையால் சேதமான இடங்களைப் பார்வையிட வரும் வனத்துறையினர், புகைப்படங்களை எடுத்துக்கொண்டு செல்வதாகவும், இரவு நேரங்களில் யானை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிப்பது இல்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனால் தாங்கள் தூக்கமிழந்து நிற்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இதனால், ஒற்றை யானையிடம் இருந்து பயிர் வகைகளைப் பாதுகாக்க விவசாயிகளே இரவு நேரங்களில் அவரவர் நிலங்களில் காவலுக்கு நிற்பது என முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர். மேலும், யானையால் சேதமான பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.