பின்னலாடை நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 19 பெண்கள் மீட்பு: திருப்பூர் ஆட்சியருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

விஜயகார்த்திகேயன்: கோப்புப்படம்
விஜயகார்த்திகேயன்: கோப்புப்படம்
Updated on
1 min read

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் ஒடிசாவைச் சேர்ந்த 19 பெண்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு, மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருப்பூர், தண்ணீர்பந்தல் காலனி பகுதியில் ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின்பேரில், கோட்டாட்சியர் ஜெகநாதன் மற்றும் வடக்கு வட்டாட்சியர் ஜெகநாதன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது, ஜெய்ஸ்ரீராம் அப்பேரல்ஸ் என்ற நிறுவனத்தில் ஒடிசாவைச் சேர்ந்த 19 பெண் தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள், சொந்த ஊருக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தும், அவர்களுக்குச் சம்பளம் வழங்காமல் அடைத்து வைக்கப்பட்டது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், அந்த 19 பேரையும் மீட்ட அதிகாரிகள், சிறுபூலுவப்பட்டியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அவர்களைத் தங்க வைத்தனர். இதன் பின்னர், அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று (ஏப்.19) மதியம் திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 19 பெண் தொழிலாளர்களையும் ரயில் மூலம் ஒடிசா மாநிலத்துக்கு அதிகாரிகள் அனுப்பினர்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விளக்கம் கேட்டு திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் மற்றும் மாநில தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோருக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் இன்று (ஏப். 20) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்கள் இரண்டு வார காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in