Published : 20 Apr 2021 03:03 PM
Last Updated : 20 Apr 2021 03:03 PM

யோகி பாபு நடித்த மண்டேலா படத்துக்கு எதிராக வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை

நடிகர் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

நடிகர் யோகி பாபு நடித்த மண்டேலா படத்தில் முடிதிருத்துவோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக பிரச்சினை எழுந்தது. எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் படத்தை மறுதணிக்கைச் செய்ய நீதிமன்றத்தில் படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முடி திருத்துவோர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யபட்ட மனுவில், “மருத்துவர் சமுதாயம் என்பது மிகவும் பிற்படுத்தபட்ட சமூகத்தை சேர்ந்ததாகும், காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த மண்டேலா திரைப்படம் ஏப்ரல் 4 ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது.

இந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை கழிவறையை கழுவச் செய்வது போன்ற காட்சிகளும், முடி திருத்தும் தொழிலாளியை செருப்பால் அடிப்பதும், காரில் ஏற தகுதி இல்லை என காரின் பின்னே ஓடி வர சொல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனை தணிக்கை குழு தணிக்கை செய்ய தவறி விட்டது. இந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் மருத்துவர் சமுதாய மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது.

எனவே யோகிபாபு நடித்த மண்டேலா’ திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்யவேண்டும், சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்”. என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x