

நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க கிருமிநாசினி தெளிப்பு உட்படப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று 30 நபர்களுக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டைப் போல தற்போது தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
உதகை நகராட்சியில் 75 இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு வெளியாட்கள் உள்ளே செல்லாமல் இருக்க தகரம் கொண்டு மூடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் முதல் அலையின்போது உதகை கிராமப்புறங்கள் கிளஸ்டர்களாக மாறியதால், கிராமங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஊராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்புக் கவச உடை அணிந்து கிருமிநாசினி தெளித்து, சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அதிகரட்டி கிராமத்தில் செயல் அலுவலர் ஜெகநாதன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மக்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, பணியாளர்கள் சளி மாதிரிகளைச் சேகரித்தனர். அவை கரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ''நமது மாவட்டத்தில் 3,97,000 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த மக்கள்தொகை 7,35,000 ஆக உள்ளது. இதில் இதுவரை 1,05,434 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.