

தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக மத வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
உருமாறிய கரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினசரி தொற்றால் பாதிக்கப்படுவோர் 2.5 லட்சத்தைத் தாண்டியுள்ளனர். மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கரோனா தாக்குதல் கடுமையாக உள்ளது.
தமிழகத்தில் தினசரி தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சென்னையில் 3000க்கும் அதிகமானார் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பெருகி வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வர், கடந்த 2 நாட்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், மற்ற செயல்பாடுகளுக்குக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
கோயில், சர்ச், மசூதி சார்ந்த திருவிழாக்கள் மத வழிபாட்டு நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. முன் கூட்டியே முடிவெடுத்திருந்தால் பொதுமக்கள் அனுமதியின்றி நடத்த அனுமதிக்கப்பட்டது. மத வழிபாடுகள் இரவு 10 வரை மட்டுமே என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரிப்பதை அடுத்து மேலும் கட்டுப்பாடுகளை வகுக்கவும், மத நிகழ்ச்சிகளில் மக்கள் கூடாமலிருப்பதை உறுதிப்படுத்தவும் அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்துகிறார்.
இன்று காலை அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் இந்து மதத் தலைவர்கள், மடாதிபதிகள், இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள், கிறித்தவ மதத் தலைவர்களுடன், சுகாதாரத் துறைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், காவல்துறை தலைவர் திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.