

ஆட்சி எங்களுக்கே என மார்தட்டும் திமுகவின் முக்கிய வேட்பாளர்கள் பலரும் அமைச்சர் பதவிக்கு ஆளாய் பறக்கிறார்கள். திருச்சியில் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவருக்கும் அமைச்சர் பதவி நிச்சயம் என்று பேசப்படும் நிலையில், இவர்களுக்கு ஊடாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுடன் மோதிய கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜும் அமைச்சர் கனவில் மிதக்கிறாராம். “அண்ணன் தான் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்” என்று இனிகோவின் ஆட்கள் இனிப்பாக பேச, “எங்காளுக்கு இந்த முறை அறநிலையத் துறை அமைச்சர் பதவியாம்” என்று நேர்பட பேசுகிறது நேரு வட்டாரம். “அப்போ... போக்குவரத்து?” என்று கேட்டால், “அது டி.ஆர்.பாலு மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு” என்று பட்டென பதில் வருகிறது. கருணாநிதியின் திருவாரூரில் போட்டியிட்ட பூண்டி கலைவாணனுக்கும் அமைச்சராகும் ஆசை எட்டிப் பார்க்கிறதாம்.