

கடலோர மக்களின் நெஞ்சங்களில் மாறாத வடுவை ஏற்படுத்திவிட்ட சுனாமிப் பேரழிவின் 11-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப் பட்டது. சுனாமியில் உறவுகளை பறிகொடுத்த தமிழக கடலோரப் பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடலில் பாலை ஊற்றியும் மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். சென்னை, திருவள்ளூர் கல்பாக்கம், கடலூர், நாகை, வேளாங்கண்ணி, புதுச்சேரி, தூத்துக்குடி உள்ளிட்ட கடலோரப்பகுதிகள் முழுவதும் ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆழிப்பேரலை, சுனாமி என்பதெல்லாம் தமிழகத்தைப் பொருத் தவரை அந்நிய வார்த்தைகளாகத்தான் இருந்தன. பரந்துவிரிந்த சமுத் திரத்தை அவர்கள் கடல் அன்னை யாக, கடல் மாதாவாகவே தொழுது வந்தனர். அது பெருஞ்சீற்றம் கொண்டு பேரலையாக எழுந்து, உயிர் களையும் உடைமைகளையும் வாரிச் சுருட்டிக்கொண்டு போகும் என்று அவர்கள் கற்பனையில்கூட நினைத்தது இல்லை. ஆனால், அந்த பேரழிவு 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி நடந்தது. வானுயர எழுவது எது என்று ஊகித்து கடலோர மக்கள் சுதாரிப்பதற்குள்ளாக அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மாலத்தீவு என பல நாடுகளிலுமாக சுமார் 2.80 லட்சம் பேரை பலிவாங்கியது அந்த நாசகார சுனாமி. தமிழக கடலோரப் பகுதிகளில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தின் 11-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிமுக மற்றும் வடசென்னை மீனவர் கிராமங்கள் ஐக்கிய சபை சார்பிலும் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக் குமார் தலைமையில் மீனவ மக்கள் மற்றும் அதிமுகவினர் பங்கேற்று கடலில் பால் ஊற்றியும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக மவுன ஊர்வலம் நடந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மீனவர் நலச்சங்கம், சென்னை பைபர் படகு மீன்பிடி தொழி லாளர் நலச்சங்கம், சென்னை செங்கை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர் மற்றும் தொழிலாளர் சங்கம் சார்பிலும் மெழுகுவத்தி ஏற்றி, மலர்கள் தூவி அஞ்சலி செலுத் தப்பட்டது. இதைத் தொடர்ந்து காசிமேடு துறைமுக பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டன.
பட்டினப்பாக்கம் மற்றும் அதை ஒட்டியுள்ள சீனிவாசபுரம், முள்ளி மாநகர், நம்பிக்கை நகர், ராஜீவ் காந்தி நகர், பவானிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக் கணக்கான மக்கள் கடற்கரையில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத் தினர். பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத் தினர். மெரினாவில் தொடங்கி, பட்டினப் பாக்கம் சீனிவாசபுரம் வரை ஆங் காங்கே தன்னார்வ தொண்டு அமைப் பினரும் பள்ளி மாணவ, மாணவிகளும் மெழுகுவத்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தினர்.
நாகப்பட்டினம்
சுனாமியின் கோரத்தாண்டவத்துக்கு அதிகம் பாதிக்கப்பட்டது நாகை மாவட்டம். குறிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏராள மானோர் வேளாங்கண்ணி மாதா கோயிலில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் திரண்டிருந்தனர். ஆழிப் பேரலை ஏறக்குறைய அத்தனை பக்தர் களையும் காவு வாங்கியது.
நாகப்பட்டினம் நகரத்தின் பெரும் பாலான இடங்களுக்குள் புகுந்த வெள்ளம் உயிர்களையும் உடமை களையும் வாரிச்சுருட்டியது. உயிரிழந் தோர் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு ஸ்தூபி முன்பு ஏராளமானோர் குவிந்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் நாகை நம்பியார் நகர் கடற்கரைப் பகுதிக்கு திரண்டு வந்த மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத னர். மெழுகுவத்தி ஏற்றி வைத்து உறவுகளை நினைத்து கதறினர்.
கடலூர் சில்வர் பீச், தேவனாம்பட்டி னம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப் பட்டிருந்த படகுகளை பல கி.மீ்ட் டருக்கு அப்பால் கொண்டுவந்து சிதைக்கும் அளவுக்கு கடலின் வீரியம் இருந்தது. இங்கும் கொத்துக் கொத்தாக மக்கள் மாண்டனர். அந்த பகுதிகளிலும் மக்கள் அஞ்சலிக்காக திரண்டனர். புதுச்சேரியிலும் இந்த சோகம் நீடித்தது. தூத்துக்குடியிலும் உயிர் பலி வாங்கிய சுனாமியின் அச்சம் 11 ஆண்டுகள் கடந்தும் அப்பகுதி மக்களுக்குப் போகவில்லை. தூத்துக்குடி திரேஸ்புரத்தில் குவிந்த மக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.