

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல துணிக்கடையின் பணியாளர்கள் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள அந்தக் கடையின் தங்கும் விடுதியை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மூடி சீல் வைத்தனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் கரோனா பரவலை கட்டுப்படுத்த, தினமும் 10 ஆயிரத்துக்கு குறையாத அளவில் பரிசோதனைகளை செய்து வந்தது. குறிப்பாக, பெரிய வணிக வளாகங்கள், துணிக்கடைகள், கோயம்பேடு சந்தை போன்ற பகுதிகளில் 2 வாரங்களுக்கு ஒருமுறை பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து வருகிறது.
புரசைவாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல துணிக்கடையில் நடத்திய பரிசோதனையில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு அந்தக் கடை மூடப்பட்டது. பின்னர் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் மற்றவர்களிடம் பரிசோதனை நடத்தியதில் மீண்டும் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கடையின் பணியாளர்கள் தங்கியுள்ள புரசைவாக்கம் கரியப்பா சாலையில் உள்ள தங்கும் விடுதி மற்றும் அதே கட்டிடத்தில் உள்ள துணிக்கடை, ஃபர்னிச்சர் கடை ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். அந்த நிறுவனத்தில் மொத்தம் 360 பேருக்கு பரிசோதனை செய்ததில் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.