6 லட்சம் டோஸ் தடுப்பூசி இன்று தமிழகம் வருகை: மத்திய அரசு அனுப்பி வைப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

6 லட்சம் டோஸ் தடுப்பூசி இன்று தமிழகம் வருகை: மத்திய அரசு அனுப்பி வைப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசு அனுப்புவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கடந்த 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்ற தடுப்பூசி திருவிழாவில் சுமார் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதுவரை சுமார் 48 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. திருச்சி, மதுரைஉள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மையங்களில் தடுப்பூசி இருப்பு இல்லாததால், ஊசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி வந்ததும் பணி தொடங்கப்படும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

தடுப்பூசி ஓரளவு இருப்பு இருக்கும் சென்னை, கோவை உள்ளிட்ட சில இடங்களில் உள்ள மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து போட்டுச் செல்கின்றனர்.

இதுதொடர்பாக கேட்டபோது,சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்துக்கு இதுவரை 55.8 லட்சம் டோஸ் கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசு அனுப்பியுள்ளது. சுமார் 48 லட்சம் லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 7.8 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. முன்னுரிமை அடிப்படையில் கரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

தற்போது கையிருப்பில் உள்ளதடுப்பூசிகளைக் கொண்டு ஒரு வாரம் சமாளிக்க முடியும். 20 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு கடந்த வாரம் மத்திய அரசிடம் கேட்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு 1 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியது. 20-ம் தேதி (இன்று) 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி தமிழகம் வரவுள்ளன. சென்னையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கில் உள்ள தடுப்பூசிகளை வழங்குமாறு கேட்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in